திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2174 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் 73514 மாணவர்கள் மற்றும் 73899 மாணவிகள் என மொத்தம் 14413 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு அரசு சார்பில் 4 செட் கட்டணமில்லா சீருடைகள் ரூ.4 கோடியே 37 இலட்சத்து 83 ஆயிரத்து 959 மதிப்பில் தைத்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் காஞ்சி சாலை புத்தர் நகரில் செயல்படும் மாவட்ட துணி வெட்டும் மையம் மற்றும் காந்தி நகரில் செயல்படும் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசைக் கூட்டுறவு சங்கத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா சீருடைகள் தைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியில் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்களில் 1215 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.




மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2024 - 2025 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி சீருடைகள் தைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 07.06.2024 அன்று காந்தி நகரில் உள்ள ஸ்ரீ நாராயண திருமண மண்டபத்தில் சீருடைகள் தைக்கும் மகளிருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் சீரூடைகள் தைக்கும் முறைகள் குறித்தும் தரமாக தைத்து தரவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து இன்று காஞ்சி சாலை புத்தர் நகரில் செயல்படும் மாவட்ட துணி வெட்டும் மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா சீருடையின் துணிகள் வெட்டும் முறைகள் குறித்தும், வெட்டும் பணியில் ஈடுபடும்  பணியாளர்களின் எண்ணிக்கை துணிகளின் தரம் ஆகியவற்றை  ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கி குறித்த காலத்தில் பணியை தரமாகவும் விரைவாகவும் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.





மேலும் காந்தி நகரில் செயல்படும் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசைக் கூட்டுறவு சங்கத்தில் தைக்கும் முறைகள் குறித்தும் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர், மேல் சட்டையும், 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை, சட்டையும் வழங்கப்படுகின்றன. 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு முழுக்கால் சட்டையும் (பேண்ட்), மாணவிகளுக்கு சுடிதார் மேல்கோட்டும் வழங்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளுடன் சீருடைகள் தைக்க வேண்டும் குறிப்பாக தேவைப்படும் இடங்களில் இரண்டு தையல்கள் போட வேண்டும் கேன்வாஸ் காலர் வைத்து தைக்க வேண்டும் நைலான் பட்டன்கள் பயன்படுத்த வேண்டும். சரியான அளவில் அழகாகவும் தரமாகவும் சீருடைகளை தைத்து வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி சீரூடை துணியின் தரம், தையலின் தரம் தையல் தைக்கும் முறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு தையல் தைக்கும் பணியில் ஈடுபடும்  தொழிலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யா, மாவட்ட தொழிற் கூட்டுறவு அலுவலர் எம்.ஜெகதீசன் சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.