திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் மணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கமிஷனர் சரவணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு காரணமான திமுக அரசை கண்டித்து நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இந்த நகரமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசுகையில், ஆரணி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்வதில்லை, குப்பை வாகனங்கள் வருவதில்லை, அதேபோன்று நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில்  குடிநீர் சரியாக வருவதில்லை, மின்விளக்கு எரிவதில்லை.


கள்ளச்சாராயம் குறித்து அதிமுக, திமுக இடையே வாக்குவாதம் 


தற்போது மழை விட்டு விட்டு பெய்வதால் அனைத்து வார்டுகளிலும் கொசு அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிப்பதில்லை என்று குற்றம் சாட்டினர். இதைக் கேட்டு கோவம் அடைந்த சேர்மன் மணி அதிகாரிகளை பார்த்து நகராட்சிக்கு எதுக்கு வர்றீங்க ஒழுங்கா வேலை செய்யுங்க கவுன்சிலர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வையுங்கள் என்றார். அதிமுக கவுன்சிலர் மோகன் பேசுகையில், எதற்கெடுத்தாலும் திமுகவின் போர்க்கால ஆட்சி என்று பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் நகராட்சி நிர்வாகம் சரியாக செயல்படவில்லை நான் கவுன்சிலர் ஆகி நான்கு கமிஷனர்களை மாற்றி விட்டார்கள், கள்ளக்குறிச்சி சாராய பலிக்கு திமுகவின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.


அதிமுக கவுன்சிலர் பேச்சால் டென்ஷன் அடைந்த சேர்மன்


இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த சேர்மன் மணி அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் குருவியை சுடுவது போல் 15 பேரை சுட்டு சாகடித்தீர்கள் அது தெரியுமா என்றார். 24வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி தண்ணீர் பாட்டிலை காட்டினார். எங்கள் வார்டில் மின்கம்பம் பழுதாகி உள்ளது அதனை மாற்றுவதற்கு கூறினோம், பக்ககால்வாய் அகலப்படுத்த வேண்டும், அருகில் உள்ள பூங்காவிற்கு மின் இணைப்பு வழங்கவேண்டும்  என கோரிக்கை வைத்தார். இதனால் சேர்மனுக்கும் கவுன்சிலர் மோகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர் பாரிபாபு எழுந்து திமுக ஆட்சியை பற்றி பேசாதீர்கள் இது நகரம் என்ற கூட்டம் நகராட்சி நிர்வாகத்தை பற்றி பேசுங்கள் என்றார், இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. அதிமுக கவுன்சிலர் பேச்சால் டென்ஷன் அடைந்த சேர்மன் மணி கூட்டம்  முடிவதாக கூறினார். முன்னதாக கூட்டத்தில் ஆரணி நகரில் உள்ள  33 வார்டில் அடிப்படை வசதிகள் செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.