ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்
கடலூர் சாலையில் உள்ள டி. குண்ணத்தூர் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, திருவாமாத்தூர் கண.சரவணகுமார் ஆகியோர்கள் கள ஆய்வின் போது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன் பேசுகையில்;
திருக்கோயிலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி. குண்ணத்தூர் கிராமத்தில் கள ஆய்வின் போது ஏரிக்கரையின் எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பார்த்தவாறு கொற்றவையின் சிற்பம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தின் உயரம் 6 அடியும் அகலம் 2 அடியும் உள்ள பெரிய சிலையாகும். இச்சிற்பத்தில் கொற்றவையின் வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மார்பு மற்றும் இடுப்பில் உடையுடனும் காட்டப்பட்டுள்ளது. உடைகள் நேர்தியாக மடிப்புகளுடன் காணப்படுகிறது. தோள்களில் வளைகள், காலில் கழலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு
எட்டு கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புறம் ஒரு கை அபய முத்திரையும் மற்றொரு கை அம்பு ஏந்தியும், மற்றொரு கை வாள் ஏந்தியும் மற்றொரு கை சங்கு ஏந்தியும் உள்ளது. இடப்புறம் உள்ள கை இடுப்பில் வைத்தவாறும் மற்றொரு கை வில் ஏந்தியும் மற்றொரு கை கேடயம் ஏந்தியும் மற்றொரு கையில் சக்கரமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் இடையில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத்தலையின் மீதுள்ளவாறு காட்டப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் சுட்டிக்காட்டிய இலக்கணத்துடன் இக்கொற்றவை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொற்றவை அதன் சிற்ப அமைப்பும் அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளை கொண்டு அதன் காலத்தை 6 ஆம் நூற்றாண்டின் இறுதி என கூறலாம். இச்சிற்பத்தின் வலப்புறம் உள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு ஒரளவு மட்டும் படித்தறியும் படி அமைந்துள்ளது.
தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டில்
இக்கல்வெட்டில் பெருவா இலார் மகன் தோறன் என்று ஊகித்து படித்தறியமுடிகிறது. இந்த கொற்றவை சிற்பத்தை செய்தளித்தவரின் பெயராக இருக்கக்கூடும். இவ்வூருக்கு அருகில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் காளியம்மன் கோயில் முகப்பு சுவரில் விக்கரம சோழானின் 17 ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1135) அறிஞ்சி மகள் உஞ்சியாள் என்பவர் மண்டபம் செய்வித்ததாக குறிப்பிடும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. திருக்கோயிலூர் பகுதியில் தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இப்பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இது போன்ற அரிய சிற்பங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.