திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகர் பைபாஸ் சாலையில் ரூ.29.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டட பணியினையும் மற்றும் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரூ.30.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணியினை நேரில் சென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.


பொதுப்பணித் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தாவது;


தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக ஆட்சி புரிந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நான் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ 30.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.  இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நின்று செல்லும் வசதியுடன் கட்டப்படுகிறது.


4 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் 


கடந்த ஓராண்டில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக கூடியிருக்கிறது. கடந்த கார்த்திகை தீபத்தன்று மட்டும் 30 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை முன்னேற்ற வசதிகளை நாம் செய்ய வேண்டும். இந்த பேருந்து நிலையத்துக்கு பின்புறம் 4 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமாக உள்ளது. இந்த பேருந்து நிலையம் இன்னும் பெரிதாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நகர மன்றத்தலைவர், மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த பேருந்து நிலையம் விரிவு படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.


கிரிவல பாதையில் அதிநவீன கழிவறை 


திருவண்ணாமலைக்கு வெளிநாடுகள், வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வருகின்ற ஆன்மீக பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்வதற்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். திருவண்ணாமலை நகரில் வசிக்கின்ற மக்கள் மற்றும் வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.56 கோடி செலவில் சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருகின்ற பணி நடைபெற்று வருகிறது. மேலும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக இன்னும் பல்வேறு கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. இந்து சமய அறநிலை துறை சார்பாக ஏற்கனவே முதலமைச்சர் செயலாளர் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் கிரிவலப் பாதயை மேம்படுத்துவது குறித்து சீராய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. 


கிரிவல பாதையில் 5 இடங்களில் குடிநீர் வசதி 


எனது பரிந்துரையின் அடிப்படையில் தன்னார்வலர்களுடன் இணைந்து பக்தர்கள் தங்கும் வசதியுடன் கூடிய நவீன கழிவறையுடன் கூடிய 5 கட்டிடங்கள் கட்டப்பட விருக்கிறது. இந்த கட்டிடம் உலக தரத்தில் கட்டி முடிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் நெடுஞ்சாலை துறையின் சார்பில் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் குடிநீர் வசதி 5 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வருகின்ற ஆன்மீக பக்தர்களை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகளை விரிவு செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர் மந்தாகினி திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்தக்கொண்டனர்;.