கோடை காலம் முடிந்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் இயங்கும் ஆரஞ்ச் என்ற தனியார் பள்ளி வாகனம் இன்று காலையில் பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக படவேடு பகுதியில் உள்ள  வெல்லூர், நடுக்குப்பம், காமக்கூர், முள்ளிபட்டு வழியாக நெசல் கிராமத்தில் உள்ள தங்களுடைய பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல தனியார் பேருந்து சென்றது. அப்போது நடுக்குப்பம் கிராமத்தில் குழந்தைகளை ஏற்ற முயன்றபோது பள்ளி வாகனம் முன் இன்ஜின் பகுதியில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டு திடீரென தீ முண்டது. இதனால் பேருந்தில் இருந்த சுமார் 13 குழந்தைகள் அலறியறிடித்தனர். பின்னர் பள்ளி  வாகனத்தில் புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்  உடனடியாக 13 குழந்தைகளை பேருந்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.


தீயை அணைத்த தீயணைப்பு துறை 


இந்த சம்பவம் குறித்து ஆரணி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் பூபாலன் (பொறுப்பு) தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி பேருந்தில் ஏற்பட்ட தீயை  தீயணைப்பு துறையினர் அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கபட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி களம்பூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பள்ளி திறந்த முதல் நாளில் தனியார் பள்ள பேருந்தில் இன்ஜின் பழுதாகி தீ மூண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில், “தனியார் பள்ளி பேருந்து தீ பிடித்த சம்பவம் பேருந்து இன்ஜின் பகுதியின் வழியாக வரும் ஒயர் எதிர்பாராத விதமாக கருக துவங்கியுள்ளது. இதனால் புகை வெளியே வந்துள்ளது. தீ பரவதற்குள் பள்ளி பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு மாணவர்களை கீழே இறக்கிவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது” என தெரிவித்தார்.