திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்தாவது :
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளசாராயத்தில் மெத்தனால் கலந்தால், எந்தவித வாசனையும் தெரியாது, இதனால் அனைத்துப்பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தவேண்டும், அதேபோன்று மற்ற மாநிலங்களில் இருந்து நமது மாவட்டத்திற்கு கள்ளச்சாராயம் கடத்திவரப்படுகிறது. அதனால் மற்ற மாநிலங்கள் பதிவெண் கொண்ட வாகனங்களையும் சோதனை செய்யவேண்டும், வருவாய்த்துறையின் மூலம் கிராம உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் அளவில் குழு அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை,கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் இடங்களை கண்காணித்தும் மற்றும் பொது மக்களிடமிருந்து ஏதாவது புகார் வரப்பெற்றால் உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இதனை வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலை சார்ந்த இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், ஜமுனாமரத்தூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்,
காவல் துறையினருடன் ,வருவாய்த்துறை இணைந்து கூட்டு ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்றல், கடத்துதல் போன்ற நடவடிக்கைகளை அறிந்து கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தலை தடுக்க மாவட்ட எல்லைகளின் சோதனை சாவடிகளை கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும், மதுபானம் சில்லறை விற்பனை கடைகளில் குறைவாக விற்பனை உள்ள இடங்களை கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள ஆய்வு:
கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அரசியல் பின்புலம் உட்பட யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள பகுதிகளில் கள்ளசாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகிப்பதை தடுக்க தொடர் களஆய்வு மேற்கொள்ளவும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இளைஞர்கள் கஞ்சாபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து திரும்பி வரமுடியாமல் உள்ளனர். கஞ்சாவாங்குவதற்க்காக பணம் இல்லாமல் சிறிய திருட்டில் இருந்து அவர்கள் துவங்குகின்றனர். அதனால் கஞ்சாவை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக தொடர்ந்து கள ஆய்வு செய்து இனி வரும் காலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை, காய்ச்சுதல், கடத்தல் போன்றவைகள் நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இக்கூட்டத்தில் கள்ளச் சாராயம் குறித்த புகார்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்கள் கட்டணமில்லா எண் 10581 என்ற எண்ணிற்கும் 89394 73233 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.