திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் உள்ள களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவர் மூன்றடி உயரம் தான் இருப்பார். மரபணு கோளாறால் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சக்திவேல் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரியை பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி சேர்த்தனர். அங்கு மயக்கிவியல் துறை தலைவர் பாலமுருகன், மருத்துவர் சரவணகுமார், பாலகிருஷ்ணன், ஆனந்த்ராஜ் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் ஜெயந்தி அருமை கண்ணு, நஸ் குரு, கலைவாணி, ராஜேஷ் ஆகியவர் கொண்ட மருத்துவக் குழுவினர் ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்
அதன்படி மருத்துவர்களின் கடின முயற்சியால் அறுவை சிகிச்சை மூலம் ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சவாலான முயற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழுவினருக்கு கல்லூரி முதல்வர் அரிகிருஷ்ணன், கண்காணிப்பாளர் மாலதி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கதிர் ஆகியோர் பாராட்டினர்.
இது குறித்து மயக்கவியல் துறை தலைவர் பாலமுருகன் கூறுகையில், வளர்ச்சி குறைவான 3 அடி உயரம் உள்ள பெண் ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்ததே சவாலான செயல்தான். அவருக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை, அறுவை சிகிச்சை செய்வதும் மிகவும் கடினமான செயல் ஒன்றுதான்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்பார்த்து பெண்குழந்தை பிறப்பு
இருப்பினும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தோம், ஆனாலும் அவருக்கு மயக்கம் மருந்து செலுத்துவதிலும் சிக்கல் ,வளர்ச்சி குன்றிய இவருக்கு மயக்கம் மருந்து செலுத்தினால் அவருடைய உயிருக்கு ஆபத்து நேரிடும், அதனால் முதுகு எலும்பில் ஏபிடி யூரல் மூலமாக மயக்க மருந்தினை வயிற்றுப் பகுதிக்கு மட்டும் செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டு எங்களது இந்த சவாலான முயற்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது. பிறந்த பெண் குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர் என இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் மூன்று அடி உயரமுள்ள பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.