தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்டோ ஓட்டுநர்கள் எப்போதுமே, பொதுமக்களின் மனம் கவரும் நபர்களாகவே இருந்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் அவர்களின் செயல்களும் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரசவத்திற்கு இலவசம் தொடங்கி, தவறவிடும் பொருட்களை உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் மனம் படைத்தவர்களாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் வந்தவாசியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், சென்னையில் தொலைத்த பொருளை உரியவரிடம் ஒப்படைத்து இருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறி உள்ளது.
வந்தவாசி ஆட்டோ ஓட்டுனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரண்குமார். இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை - திருவேற்காடு பகுதியில் கார்த்தி, பவானி, தம்பதியினர் தனது குழந்தையுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு கோலடி - எம்ஜிஆர் நகருக்கு சென்று இறங்கிவிட்டனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் சரண்குமார் அவர்களை இறக்கி விட்டு விட்டு தனது ஆட்டோ ஓட்டும் வேலையை முடித்து கொண்டு தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு வேலை நிமித்தமாக ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி ஆட்டோவில் வைக்கும் போது. ஆட்டோவில் ஒரு பேக் இருந்தது தெரியவந்தது.
உதவிய G-Pay நம்பர்
இதை அடுத்து சரண்குமார் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது மூன்று சவரன் தங்க நகை மற்றும் 3000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், உள்ளிட்டவை இருந்ததை பார்த்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார். பின்னர் தனக்கு வந்த வங்கி மொபைல் கணக்கு ஜி.பே. மெசேஜை வைத்து செல்போன் எண்ணை கண்டுபிடித்து திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் - பவானி தம்பதியினர் குழந்தை சகிதமாக ஆட்டோவில் வரும் போது தவறவிட்டது என ஊர்ஜிதப்படுத்தினார்.
உரியவர்களிடம் ஒப்படைப்பு.
பின்னர் சம்பந்தப்பட்ட பேக்கை ஆட்டோவில் நழுவ விட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து மூன்று சவரன் தங்க நகை, 3 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் ஆதார் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் குழந்தைகளின் பொருள்கள் அடங்கிய பேக்கை ஆட்டோ டிரைவர் சரண் பேக்கை தவறவிட்ட நபரிடம் காவல்துறையினர் முன்பாக ஒப்படைத்தார்.
பேக்கை தவறவிட்ட சென்னையை சேர்ந்த கார்த்தி காவல் நிலையத்திலேயே ஆட்டோ டிரைவர் சரணை கட்டியணைத்து கைகுலுக்கி வாழ்த்து மழை பொழிந்தார். பின்னர் வந்தவாசி காவல் நிலைய உதவியாளர் முருகன் ஆட்டோ டிரைவர் சரணை பாராட்டி சால்வை அணிவித்தார். மற்றும் வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன் ஆகியோர் ஆட்டோ டிரைவர் சரணுக்கு கைகுலுக்கி எடுத்துக்காட்டான மனிதன் என பாராட்டினார்.
மனநிறைவாக உள்ளது
இதுகுறித்து சரண்குமார் நம்மிடம் தெரிவிக்கையில், சென்னையில் சவாரி முடித்துவிட்டு, எனது சொந்த காரணங்களுக்காக வீடு திரும்பிய போது தான் ஹேண்ட் பேக் தவற விட்டு சென்றது தெரியவந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால், வழியின்றி வந்தவாசி திரும்ப வேண்டிய சூழல் இருந்தது. இதனால் வந்தவாசி திரும்பியவுடன், காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். மேலும் G-Pay உதவியுடன் அவர்களுடைய தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, காவல்துறை உதவியுடன் ஒப்படைத்தது மன நிறைவாக உள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எளிய மக்கள் என்றுமே, பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாதவர்களாகவே இருந்து வருகின்றனர், இதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் ஆட்டோ ஓட்டுனர் சரண்குமார்.