தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், மேம்படுத்துதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன், தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971 இல் நிறுவப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 40 தொழில் பூங்காக்களின் வளர்ச்சியை வளர்த்து வருகிறது. 16 மாவட்டங்களில் மொத்தம் சுமார் 45,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. 


சிப்காட் தொழிற்சாலை பூங்கா


தொடர்ந்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொழில் பூங்காக்களும் விரிவு படுத்தப்பட்டு வருகின்றன‌. அதேபோன்று ஒவ்வொரு சிப்காட் தொழிற்சாலை பூங்காவிற்கும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


இதன்மூலம் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கும் சாலைகள் மிக முக்கிய தேவைகளாக இருந்து வருகிறது.


செய்யாறு தொழில் பூங்கா - செய்யாறு சிப்காட் தொழிற்சாலை 


திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செய்யாறு பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.‌ இந்த தொழிற்சாலையில் முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். இந்த பகுதியில் இயங்கி வரும் சிப்காட் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின.


அதேபோன்று தொழிற்சாலையை சுற்றி பல்வேறு வேலை வாய்ப்புகளும் மறைமுகமாக உருவாக்க தொடங்கின.தொடர்ந்து செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 


விரிவாக்கம் பணிகள்


மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு செய்யார் சிப்காட் இரண்டாம் கட்ட விரிவாக்க பணி தொடங்கப்பட்டது . இதன்மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இதன்மூலம் மொத்த பரப்பளவு 3,174.33 ஏக்கராக அதிகரிக்க உள்ளது. இதற்காக செய்யார் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள, மேல்மா பகுதியில் செய்யார் சிப்காட் அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


ஒரகடத்தை இணைக்கும் சாலை


தொடர்ந்து செய்யாறு சிப்காட் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதால் அதற்கு ஏற்றவாறு சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என சிப்காட் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக செய்யாறு சிப்காட்டில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் தொழில் முனையத்திற்கு தனி சாலை போட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து பிற தொழிற்பேட்டைகள் உடன் இணைக்கும் வகையில் சாலை விரிவாக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அதாவது, காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை மாநில நெடுஞ்சாலை (SH-116) 6 வழி தொழில் வழித்தடம் வேண்டும் எனவும், சிப்காட் தொழிற்சாலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


திட்ட மதிப்பீடு


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சாலை அமைப்பதற்கான திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகியவற்றிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை வண்டலூர் அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள மண்ணிவாக்கத்தில் இருந்து - வந்தவாசி வரை இந்த சாலை அமைய உள்ளது. ஆறு வழிச்சாலையாக இந்த சாலை அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 75 கிலோமீட்டர் தூரம் இந்த சாலை அமைய உள்ளது.