திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் விடிய விடிய தனது கணவருடன் மாஸ்க் அணிந்து கிரிவலம் சென்ற நடிகை சினேகா, திருநங்கைகள் மற்றும் கிரிவல பக்தர்கள் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

Continues below advertisement


பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை முக்தி தலமாக போற்றப்படுகிறது. இங்கு மலையை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது. கிரிவலம் வந்து வழிபட்டால் பாவங்கள் தீரும், முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டால் சிவனின் அருள் மட்டுமின்றி சித்தர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் அருளும் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை.


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ தினமான நேற்று சாமி தரிசனம் மேற்கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை சினேகா தனது கணவருடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டார்.


14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலம் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம் வாயு லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும், திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோவிலிலும் மாஸ்க் அணிந்து கொண்டு தரிசனம் மேற்கொண்ட சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா கிரிவலப் பாதையில் மனமுருக சாமி தரிசனம் செய்தனர்.


இரவு நேரத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட திரைப் பிரபலங்களை கண்ட திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் அவருடன் நின்று செல்பியும், குழு புகைப்படமும் எடுத்து உற்சாகமடைந்தனர்.


கிரிவலப் பாதை :


2669 அடி உயரம் கொண்ட அண்ணாமலை பல யுகங்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மலையில் சித்தர்கள் பலரும் தற்போதும் சூட்சும வடிவில் தவம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் வாழும் ஆன்மிக பூமியாக திருவண்ணாமலை கருதப்படுகிறது. அதனாலேயே திருவண்ணாமலையில் மலையை வலம் வந்து வழிபடுவதால் முக்தி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 14 கி.மீ., தூரம் கொண்ட திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் விநாயகர் கோவில், அஷ்ட லிங்கங்கள்,ஜீவ சமாதிகள், திருக்குளங்கள், தீர்த்தங்கள் என மொத்தம் 99 கோவில்கள் உள்ளது.