Oragadam cheyyar Sipcot Road: ஒரகடம் செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கிய பின்பு, செய்யாறு தொழிற் பூங்காவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும்.
தொழில் மாவட்டம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் அதிகளவு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற் பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்த தொழில் பூங்காற்றல் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிற்கு வருவாய் கிடைத்து வருகிறது.
செய்யார் சிப்காட் பூங்கா - Cheyyar Sipcot
அதேபோன்று காஞ்சிபுரத்திற்கு அருகே, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்கால் என்ற பகுதியில் செய்யார் சிப்காட் பூங்கா அமைந்துள்ளது. காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அமைந்துள்ள இந்த தொழில் பூங்கா பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
தினமும் இந்த தொழில் பூங்காவில் உற்பத்தியாகும், பொருட்கள் சாலை மார்க்கமாக சென்னை துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. செய்யார் சிப்காட் பகுதியில் இருந்து, வாலாஜாபாத் சாலையை அடைந்து துறைமுகங்களுக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. செய்யார் சிப்காட் பகுதியில் இருந்து, வாலாஜாபாத் செல்ல நேரடி வழித்தடம் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் காஞ்சிபுரத்திற்கு வந்து கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே நேரத்தை மிச்சப்படுத்தவும், பொருளாதார ரீதியில் பலன் கிடைக்க வேண்டும் என்றால் தொழில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்றைய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெளியான அதிரடி அறிவிப்பு
இது தொடர்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது: தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களில் உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஒரகடம் செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கிய பின்பு, செய்யாறு தொழிற் பூங்காவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக 250 கோடி ரூபாய் மதிப்பின் முதற்கட்ட பணிகள் நடைபாந்தில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன? Key Features
இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், தொழில் வளர்ச்சி கைகொடுப்பதோடு, பயண நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் செலவும் குறையும்.
வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதி மக்கள் செய்யாறு, வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இதேபோன்று வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் இருந்து வருபவர்களுக்கும் இந்த வரப்பிரசதமாக இருக்கும்.
31 கிலோமீட்டர் பயணம் இனி 15 கிலோ மீட்டர் தூரமாக குறையும் என்பதால், இது மிகப்பெரிய அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.