குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்கள், சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழா முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அதன் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.காத்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷனி, கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் 94 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் காது கேளாதோர் மாணவர்கள் சைகையின் மூலமாக நடனம் ஆடினர்.நடனம் ஆடிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பரிசுகளை வழங்கினார்.
மேலும் படிக்க: Republic Day 2024 : இந்திய மாணவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! குடியரசு தினத்திற்கு பிரான்ஸ் அதிபர் சர்ப்ரைஸ்...!
பின்னர் வருவாய்த்துறை, பழங்குடியினர் நலன், கூட்டுறவுத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 91 பயனாளிகளுக்கு 6 கோடியே 17 லட்சத்தி 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி மதுசூதனன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் ரிஷப், செய்யார் உதவி ஆட்சியர் பல்லவி வர்மா, திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.