Modi - Macron: டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று இந்தியா வந்தடைந்தார்.
இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபர்:
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மேக்ரானை வரவேற்ற மோடி:
இதனை தொடர்ந்து, இன்று நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று இந்தியா வந்தடைந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்ட அவர் நேரடியாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு நேற்று பகல் 2.30 வந்தடைந்தார்.
ஜெய்ப்பூர் வந்தடைந்த மேக்ரானை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் முதல்வர் பஜன் லால் சர்மா ஆகியோர் வரவேற்றனர். இதனை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட அதிபர் மேக்ரான் அங்கு நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி, உள்ளூர் கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து வியந்தார்.
பின்னர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான ஐந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை, பிரதமர் மோடி வரவேற்றார். அங்கு, பழங்கால இந்தியர்களின் வானிலை ஆய்வகத்தை மேக்ரான் பார்வையிட்டார். ஐந்தர் மந்தரில் இருந்து சங்கநேரி கேட் வரை மேக்ரானும், பிரதமர் மோடியும் காரில் ஊர்வலமாக சென்றனர்.
டீ குடித்த மோடி, மேக்ரான்:
இதனை தொடர்ந்து, ஜெய்ப்பூரில் புகழ்பெற்ற சாஹு டீ கடையில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரானும் டீ அருந்தினர். இரண்டு பேரும் பேசிக்கொண்டே டீ அருந்திக் கொண்டிருந்தனர்.
பின்னர், டீக்கான 2 ரூபாய் கட்டணத்தை மேக்ரான் தனது யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்தினார். தனது செல்போன் மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த மேக்ரான், கட்டணத்தை செலுத்தியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.