கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 27 வயதான இவர் பெயின்டிங் காண்டிராக்டரான பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் பயின்ற போது காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இளம் பெண் சுரேஷ் குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளதாகவும், அதனால் சுரேஷ் குமார் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வாக்கு வாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது அப்பெண்ணிற்கு தாழக்குடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தெரிந்த சுரேஷ் குமார். தாழக்குடி பகுதியில் சென்று அந்த வாலிபரிடம், காதல் விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த 6 ஆம் தேதி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு சுரேஷ் குமாரை அழைத்துள்ளனர். இச்சூழலில் சுரேஷ் குமார் வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் காட்டுப்புதூர் பகுதியில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தென்னை தோப்பில் விஷமருந்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர் இதில் ஒருதலை காதலால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என வழக்கு பதிவு செய்து உள்ளனர் .
இதற்கிடையே சுரேஷ்குமார் காவல் நிலைய விசாரணைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றதாகவும் மர்மமான முறையில் பெண் வீட்டின் அருகே உயிரிழந்து காணப்பட்டதால் இது கொலையாக இருக்கக்கூடும் எனக் கூறி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் குமாரின் உடலை பெற மாட்டோம் என தெரிவித்துள்ளனர் மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சுரேஷ் குமார் வயிற்றில் விஷம் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் இவரது மகன் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் அளவிற்கு காயம் எதுவும் இல்லை என தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் இளைஞர் சுரேஷ்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது 306 ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உரிய நீதி விசாரணை நடத்தி உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் எனவும் தலித் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.