முருகபெருமானினின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை மற்றம் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளியதும் யாகவேள்விகள் நடந்தது. மேலும் இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நாட்களில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆகம விதிகளுக்குட்பட்டு சுவாமி ஜெயந்திநாதார் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் நடந்தது.


                                  

அதே போல் தங்கதேர் உலா ரத்து செய்யப்பட்டன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்  நடந்தது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்பட்டு அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் நடந்தது.


                                  

யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை ஆனதும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. கோயிலில் மூலவருக்கு காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மூலவருக்கு உச்சிகால தீபாராதனையும், முடிந்ததும் யாகசாலையில் மகாதீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி 108 வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மூலவருக்கு மதியம் 1 மணிக்கு சாயரட்ச்சை தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.


                                  
                                  

சூரபத்மன் சிவன் கோயிலிருந்து நேரடியாக கோயில் கடற்கரைக்கு புறப்பட்டார். மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டும் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரை முகப்பில் சுற்றிலும் தகர செட்டுகளால் மறைக்கப்பட்டு நடந்தது.


                                  

முதலில் கஜமுக சூரன் முருகப்பெருமானுடன் போரிடம் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் தனது வெற்றி வேலால் மாலை சரியாக 5.12 மணிக்கு வீழத்தினார். அதனை தொடர்ந்து சிங்கமுகமாக உருவெடுத்து சுவாமி ஜெயந்திநாதரிடம் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.22 மணிக்கு தனது வெற்றி வேலால் சிங்கமுக சூரனை வென்றார்.


                                  

மூன்றாவது சூரன் தனது சுயரூபத்துடன் சூரபத்மனாக மாறி சுவாமி ஜெயந்திநாதரிடம் போர்புரிந்தான். ஓவ்வொரு முறையம் சுவாமி ஜெயந்திநாதரை மூன்று முறை சுற்றி வலம் வந்து போர் புரிந்தார். மாலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதார் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார்.



                                 

பின்னர் சேவல் மாமரமாக மாறி சுவாமி ஜெயந்திநாதரிடம் போர் செய்தார்.செந்திலாண்டவர் சேவலமாகவும், மாமரமாக தனக்குள் ஆட்கொண்டார். ஆணவத்தை அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான சூரசம்ஹாரம் விழா நிறைவு பெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்பத்தில் எழந்தருளி தீபாராதனை நடந்தது. 


                                  

இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதார் 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளியதும் சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி பிம்பத்தில் நிழல் அபிஷேகம் நடந்தது. சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.திருச்செந்தூருக்கு வரும் வழில் சுமார் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கோயிலுக்கு வந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பி வைத்தனர்.


                                  

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் இந்து அறநிலையை துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.