நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரசுப்பு. 32 வயது வயதான இவர் கூலி வேலைக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது பூர்விக சொத்தில்  பங்காளிகள்  அவரது  பங்கை பிரித்து தரவில்லை என தெரிகிறது. அதனை தொடர்ந்து அவர் கேட்டு வந்த நிலையில் இது தொடர்பாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் வந்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளித்து சென்றுள்ளார். ஆனால் அதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை இதனை அடுத்து மனம் உடைந்த சங்கரசுப்பு கடந்த 13ம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமர்ந்து இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரம் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் அலறல் சத்தத்துடன் ஓடி வந்தார்.


அப்போது பாதுகாப்பிற்கு நின்ற உதவி ஆய்வாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர். எனினும் அதற்குள்ளாக அவர் உடைகள் முழுவதும் எரிந்து போனது. மேலும் உடலிலும் 50 சதவீத அளவில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு உள்ள தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது தொப்புள் மற்றும் வயிற்றுக்கு கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீக்காயம் 90% அதிகரித்தது. மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரசுப்பு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


ஏற்கனவே இதே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமையால் மனைவி குழந்தைகள் உள்பட நான்கு பேர் குடும்பத்தோடு தீக்குளித்து உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து நுழைவுவாசல்களும் அடைக்கப்பட்டு 2 வழிகளை மட்டுமே காவல்துறையினர் பாதுகாப்புடன் பயன்படுத்தி வந்தனர். மேலும் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதோடு தீக்குளிப்பவர்களை உடனடியாக காப்பாற்ற வாசல் அருகே பிரத்யேகமாக குடிநீர் டேங்க் ஒன்றும் வைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பலர் மண்ணெண்ணைய் மற்றும் பெட்ரோல் மறைத்து வைத்து கொண்டு வந்து ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில் மீண்டும் தற்போது சொத்து பிரச்சனையால் பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்ட  சங்கரசுப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.