தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பள்ளி பேருந்துகளை நேரில் ஆய்வு செய்தார்.


தமிழகத்தில்  கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்வது வழக்கம். உதாரணமாக பள்ளி பேருந்துகளில் பிரேக் செயல்பாடு, படிக்கட்டுகள் உறுதித்தன்மை, அவசர கால வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளது ஆகியவற்றை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. தூத்துக்குடி போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


ஆய்விற்கு பின்னர் ஆட்சியர் லட்சுமிபதி கூறும் பொழுது, ”இன்று தூத்துக்குடி போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 199 வாகனங்கள்  ஆய்வு செய்யப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இந்த ஆய்வில் வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு உறுதி செய்த பின்னரே இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லும்போது அதிக எண்ணிக்கையில் அழைத்துச் செல்வதை காவல்துறையினரும், மாவட்ட போக்குவரத்து அலுவலர்களும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.