நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை, இவர் விவசாயம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு வருடம்  வாழை பயிரிட்டு இருந்தார். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காலம் என்பதால் பலரின் வாழ்வும் கேள்விக்குறியாக மாறியது, பொருளாதார ரீதியில் பலர் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர், இந்த நிலையில் வானுமாமலையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது,




இதனிடையே இந்த ஆண்டும் வானுமாமலை அவருடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்டுள்ளார். தற்போது பயிரிட்ட வாழை விளைச்சல்  சரி வர இல்லாததால் வானுமாமலை மிகுந்த கவலையில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்தில் வயலுக்கு வைத்து இருந்த  பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். பின்னர் மயங்கமடைந்து தோட்டத்திலேயே கீழே விழுந்து கிடந்து உள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் அவரை மீட்டு ஏர்வாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.




அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வானுமாமலை உயிரிழந்தார்.  இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060.