'பெண்கள் தலையில் வைக்கும் பூ கூட பனை ஓலையில்' ஆஹா அள்ளுதே..!'

’’ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் செயல்பட்ட பனைபொருள் கூட்டுறவு சங்கத்தை அரசு நிதி ஒதுக்கீடு இல்லாமல் மூடிவிட்டனர். பனை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களை அரசு ஏற்படுத்த வேண்டும்’’

Continues below advertisement

நீர்வளம் குன்றிய ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்கள் எவ்வளவு அடர்ந்து வளர்ந்துள்ளனவோ, அதற்கு ஈடாக பலன்தரும் பனை மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த காலத்தில் இப்பகுதிகளில் மட்டும் ஒரு கோடி பனை மரங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 50 லட்சமாக சுருங்கிவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூத்துக்குடி மாவட்ட எல்லையை எட்டியுள்ள கன்னிராஜபுரம் தொடங்கி, பெரியநாயகிபுரம், மாரியூர், ஒப்பிலான், வாலிநோக்கம், ஏராந்தரவை, மங்களேஸ்வரி நகர், சேதுக்கரை, பனைகுளம், அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், தினைகுளம், கொல்லந்தோப்பு, மாயாகுளம், காஞ்சிரங்குடி, ஆற்றாங்கரை, ரெகுநாதபுரம், சாயல்குடி, ஏர்வாடி, உச்சிப்புளி, பிறப்பன்வலசை, என்மனம்கொன்றான், சீனியப்பா தர்கா, வேதாளை ஆகிய இடங்களில் பனை மரங்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. ஆனால், சமீப காலமாக பனை மரங்களை செங்கல் சூளையில் எரிப்பதற்கும், கட்டைக்காகவும் அதிகளவில் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. 

Continues below advertisement

துாத்துக்குடி, விருதுநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதற்காக வருகின்றனர். பனை மரத்தின் அத்தனை பகுதிகளுமே பயன் தரக்கூடியது. பதநீர் உடல் நலத்திற்கு ஏற்ற பானம். அதில் இருந்து கிடைக்கும் கருப்பட்டிக்கு தற்ப்போது சந்தை மதிப்பு கூடிவருகிறது. நுங்கு, பனங்கிழங்கு , பனை மரத்திலிருந்து வெட்டப்படும் பனை ஓலை, மட்டை, நார் என எல்லா பாகங்களும் பயன்தந்து கொண்டேதான் இருக்கின்றன.

பனை குருத்தோலையில் இருந்து பல்வேறு அலங்கார பொருட்கள், பெட்டிகள் தயாரிக்கின்றனர். ஓலையில் இருந்து பாய் முடைதல் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு அதிகளவில் பனை மரங்கள் உள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட வியாபாரிகள் இங்கு வந்து பாய்களையும் பனை ஒலையில் செய்யப்பட்டும் கொட்டான் எனப்படும் பெட்டிகள், கூடைகள் உள்ளிட்ட பொருட்களை  மொத்தமாக வாங்கிச்  செல்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பனைபொருள் தயாரிக்கும் மகளிர் குழுவினர்,

நாங்கள் பரம்பரையாக பனை ஓலைகளை கொண்டு பொருட்களை செய்து வருகிறோம், பனை மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஓலைகளைப் பதப்படுத்தி தண்ணீரில் ஊறவைப்போம். பின்னர் அதில் வண்ண வண்ண சாயங்களை இட்டு, குருத்தோலைகளை பயன்படுத்தி அழகிய வண்ண பூத்தொப்பிகளை தயாரிக்கிறோம். இந்த வண்ணத்தொப்பிகளை 15 முதல் 25 ரூபாய் வரையிலும், பெரிய தொப்பிகளை 40 ரூபாய்க்கும் விற்று வருகிறோம்.

பனை ஓலையை கொண்டு அழகிய கைப்பை மாடலில் செய்யபப்ட்ட பைகள் 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, பொருட்கள் வைப்பதற்கான உருண்டை பெட்டிகள் 75 முதல் 90 ரூபாயில் உள்ளன. அழகிய அஞ்சறைப்பெட்டியின் விலை 350 ரூபாய்க்கும், பூப்பெட்டி 80 ரூபாய், வெற்றிலை கொட்டான் 35 ரூபாய்க்கும் விற்று வருவர்தாக கூறினார்கள். பெண்கள் தலையில் அலங்கரித்துக் கொள்ளும் வகையில் பனை ஓலையால் செய்யப்பட்ட பூ பொதுமக்களின் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த தொழிலில் பெரிய லாபம் இல்லாவிட்டாலும், மன திருப்தியோடு செய்து வருவதாக கூறும் பெண்கள், பனை பொருட்கள் தயாரிப்புக்கு அரசு முக்கியத்துவம் தருவதில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பனை பொருட்களை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். இதனால், பயன்களே அதிகம். பனை ஓலை தொப்பிகளை அணிவதால் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பனை ஓலையின் குளிர்ச்சி உடலுக்கு ஏற்றது. பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆர்டரின் பேரில் பனை ஓலை பொருட்கள் தயாரித்து கொடுக்கிறோம் என்கின்றனர்.

தற்போது, பனை பொருட்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பனை பொருள் தயாரிப்பையும் விற்பனையையும்  ஊக்கப்படுத்த வேண்டும். அதே நேரம், ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் செயல்பட்ட பனைபொருள் கூட்டுறவு சங்கத்தை அரசு நிதி ஒதுக்கீடு இல்லாமல் மூடிவிட்டனர். உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏற்ற பனை பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola