மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக 3 குடும்பத்தை சேர்ந்தவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

ஊர்மேலகியான் பகுதியை சேர்ந்தவர் பூவலிங்கம். இவருக்கும் கோவை மாவட்டம் வால்பாறை ஈட்டியார் என்ற பகுதியைச் சேர்ந்த தனம் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு பூவலிங்கம் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி தனம் மற்றும் மகனை பிரிந்ந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

 

இந்நிலையில் தனம் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கு ஒன்றில், தனத்திற்கு ஊர்மேலழகியான் பகுதியில் உள்ள பூவலிங்கம் தனக்கு சொந்தமான இடம் அல்லது ரொக்கமாக ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி பூவலிங்கம் ஜீவனாம்சம் வழங்காததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனம் பலமுறை சென்று தீர்வு கிடைக்கவில்லை என்பதால் தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும் என தனம் மற்றும் அவரது மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.

 

அதே போல் பிரானூர் பார்டர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது சகோதரி முத்துமாரி. இவர்கள் இருவருக்கும் சொந்தமாக பிரானூர் பகுதியில் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசன், லிங்கராஜ் பாண்டியன், முருகன், பெலிக்ஸ் ராஜா, மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் முத்துமாரி மற்றும் சின்னசாமியின் நிலத்தை அபகரித்தாக கூறப்படுகிறது. அது குறித்து பலமுறை நடவடிக்கை வேண்டி புகார் அளித்தாலும், காவல்துறையினர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், மேலும் மேற்கண்ட 5 நபர்களும் பண பலம் மூலம் உயர் அதிகாரிகளை விலைக்கு வாங்கியதாகவும் கூறும் அவர்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்ததாகவும் அந்த புகாருக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை இல்லை எனவும் கூறி சின்னசாமி தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.

 

அதே போல் வல்லம் கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை வேறு ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும் நியாயம் கேட்க சென்ற போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறிய விவேகானந்தன், இது குறித்து எந்த வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை எனவும் கூறி தீக்குளிக்க தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரையும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி விவேகானந்தனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.