விளாத்திகுளம் வட்டாரத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கிராமப் பெண்கள் வைப்பாற்றில் ஊற்று அமைத்து குடங்களில் குடிநீர் எடுக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் துவங்குவதற்கு முன் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை ஊரணிகளில் சேமித்து பாதுகாத்து குடிநீருக்காக பயன்படுத்தினர். இதேபோல் ஆற்றுப்பொழுகையோர கிராமங்களில் கோடை காலங்களில் ஆற்றுக்குள் ஊற்றுமைத்து அதில் கிடைக்கக்கூடிய குடிநீரை வீட்டுக்கு கொண்டு வருவது வழக்கமாக இருந்தது அன்றைக்கு இருந்த மக்கள் தொகைக்கு இது சரியாக இருந்ததாக கூறுகின்றனர் கிராம மக்கள்.
விளாத்திகுளம் வைப்பாற்றில் தற்காலத்திலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஊற்றுமைத்து தண்ணீர் எடுத்து குடிப்பதற்கும் சமையல் செய்வது உள்ளிட்ட இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே விளாத்திகுளம் வட்டாரத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பையாத காரணத்தினாலும் வறட்சி காரணமாகவும் கிராம மக்கள் வைப்பாற்றில் ஊற்று அமைத்து குடிநீரை எடுத்து வருகின்றனர்.
தற்போதைய கால சூழ்நிலையிலும் ஆற்றில் ஊற்றுமைத்து எடுக்கும் தண்ணீர் மக்கள் பருகுவதற்கு ஏதுவானதா என்பதை உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதை அவசியம் ஆகிறது. இவ்வாறு அமைக்கப்படும் ஊற்றுகளில் விஷமிகள் ஏதாவது செய்து விட்டால் அது அந்த கிராமத்தை மட்டுமல்ல மண்வளத்தையும் பாதிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்து விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள பெண்களிடம் கேட்டபோது, வைப்பாற்றில் ஊற்று அமைத்து நீர் எடுக்கும் போது தெளிவான நீராக கிடைக்கிறது இது இயற்கை அளித்த வரம் என கூறும் இப்பகுதி மக்கள் இந்த நீரை எடுத்துத்தான் பல ஆண்டுகளாக பருகி வருவதாகவும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்கின்றனர்.
ஆற்றில் ஊற்றுமைத்து எடுக்கும் குடிநீர் சுத்தமானதா என்பது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வைப்பாறு நீர் குடிக்க தகுந்த தண்ணீர் தான் என்றாலும் கூட விஷமிகள் எதில் ஏதேனும் கலந்து விட்டால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதனை உள்ளாட்சி அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும் என்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர்,கயத்தாறு பேரூராட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தலா 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனை ஒட்டி தண்ணீர் ஆதாரத்துக்கான இடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கிராமங்களுக்கு உரிய முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்