திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடியில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற  ரூ.2.5 கோடி மதிப்புள்ள  ஆம்பர் கிரிஷ் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் கடத்தலால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில்  விலை உயர்ந்த பொருள் வெளிநாட்டிற்கு கடத்த முயல்வதாக  கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குலசேகரப்பட்டினம் போலீசார் உடன்குடி  சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற உடன்குடி புதுமனை பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை சோதனை செய்ததில்  பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் எச்சம் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது.




இதனை அடுத்து போலீசார் அம்பர்கிரிஷை பறிமுதல் செய்து குமரனை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 2.5 கிலோ எடை கொண்ட இந்த அம்பர்கிரீசின் மதிப்பு சுமார் 2.5 கோடி. இதனை அடுத்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரிடம் இந்த அம்பர்கிரிஷ் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த அம்பர்கிரிஷ் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக உடன்குடி பகுதியில் 19 கிலோ ஆம்பூர்கிரிஷ் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெறும் கடத்தல்களால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




பொதுவாக நாம் வாசனைக்காக பயன்படுத்தும் திரவியங்கள் எல்லாமே மலர்கள், தாவரங்கள், மரங்கள், சில வகை விலங்குகளிடம் இருந்து கிடைக்கின்றன. கடலில் இருந்து கிடைக்கும் வாசனை பொருள் தான் அம்பர் க்ரீஸ், அதிக விலை உயர்ந்த இந்த அம்பர் க்ரீஸ் ஒரு கிலோ விலையே பல லட்சம் பெறும் என்கின்றனர். இந்த அம்பர் கடலில் நீருக்கு மேல் மிதக்கும். கடல்நீரும் இதுவும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். இதை அடையாளம் காண்பது மிகக்கடினம். இதை கண்டுபிடித்து அதை நெருப்பில் சூடாக்கினால் தான் மணம் கமழும் வாசனை வரும்.




இந்த அம்பர் கடலில் எப்படி உருவாகிறது தெரியுமா? திமிங்கிலங்கள் தான் இதை உருவாக்கும் உயிரினம். திமிங்கிலங்கள் மற்ற மீன்களுடன், கணவாய் மீன்களையும் விரும்பி உண்ணும். அப்படி உண்ணும் மீன்களின் கூறிய முட்கள் திமிங்கலத்தின் உணவுப் பாதையை குத்தி விடும். இந்த முள்ளை வெளியே எடுப்பதற்காக திமிங்கலம் வாந்தி எடுக்கும். அப்போது வெளிவரும் திரவமே அம்பராகும். இந்த திரவம் தண்ணீரில் கரையாது. இந்த பண்பினால் அது கடல் நீரில் மிதக்கிறது. ஆல்கஹாலில் கரையும் தன்மை கொண்டது. ஆல்கஹால் கலந்த வாசனைத் திரவியங்களை மதிப்பூட்டப்பட்ட வாசனை திரவியங்களாக மாற்ற இந்த அம்பர் உதவுகிறது. விலை உயர்ந்த பெர்பியும்களில் அம்பர் சிறிதளவாக கலந்திருப்பார்கள்.