நெல்லை மாவட்டம்  நாங்குநேரி அருகே அண்ணா சாலையில் பால் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் பத்மராஜா(39). இவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து வந்து கடையில் பால் பாக்கெட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது வெளியில் சென்று பைக்கில் வைத்திருக்கும் பையை எடுத்து வருவதாக கூறிவிட்டு அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வெகுநேரமாகி அவர் பொருட்களை பெற அந்த  நபர் வரவில்லை.


அதன்பின் அங்குள்ள அலமாரியில் இருந்த பெட்டியை பணியில் இருந்த பெண் திறந்து பார்த்த போது அதிலிருந்த ரூ.11,500 பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி போலீசார் முககவசம் அணிந்திருந்த அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள வங்கியின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அது போலவே நாங்குநேரி டோல்கேட் அருகே டீக்கடை நடத்தி வரும் கணபதி என்பவரது கடைக்கு அதே நபர் தலைக்கவசம் அணிந்து கொண்டு சென்றுள்ளார். அங்கு கணபதியிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து டீ பட்டறையில் இருந்த டப்பாவில் வைத்திருந்த ரூ.3500ஐ அதே நபர் திருடிச் சென்றுள்ளார். இது அவரது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்தும் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இந்த கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான நபரும், பத்மராஜா கடைக்கு வந்த நபரும் ஒருவரே என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவேறு இடங்களிலும் ஒரே நபர் முகமூடி அணிந்து கல்லா பெட்டியில் இருந்த காசை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருவதோடு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.