குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். அதன்பிறகு சற்று மழை குறைந்திருந்த நிலையில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது மழை பெய்தது. 

 

சாரல் மழையின் காரணமாக குண்டும் குழியுமாக காணப்பட்ட கோட்டார் சாலை மோசமாக உள்ளது. அந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தக்கலை, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, இரணியல், திருவட்டாறு, குலசேகரம், மார்த்தாண்டம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை நீடித்தது. சாரல் மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது. மலையோரப் பகுதியான பாலமோர் மற்றும் அணைப்பகுதிகளான பேச்சிப் பாறை, பெருஞ்சாணி , சிற்றாறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு ரம்யமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். சூறை காற்றுடன் பெய்து வரும் மழையின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரமும் ஆங்காங்கே தடைபட்டது. 

 


 



 

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக மீனவர்கள் இன்று 6-வது நாளாக கடலுக்கு செல்லாத தால் சின்ன முட்டம், குளச்சல் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

தற்போது குமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயத்திற்கு தேவையான போதிய தண்ணீர் அணைகளில் உள்ளது. தற்போது பெய்து வரும் சாரல் மழையால் இந்த ஆண்டிற்கான கன்னிப்பூ சாகுபடி நல்ல விளைச்சல் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.