கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி(46). 2005-ல் மயூகம் என்ற மலையாள சினிமா மூலம் நடிப்பு உலகிற்கு அறிமுகம் ஆனார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் நடித்துள்ளார். பழம்பெரும் மலையாள வில்லன் நடிகரான டி.ஜி.ரவியின் மகனான ஸ்ரீஜித் ரவி ’கும்கி’ படத்தில் வில்லன் நடிகராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த நிலையில் திருச்சூரில் உள்ள எஸ்.என் பூங்காவில் சிறுமிகள் முன்பு நிர்வாணமாக நின்ற வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் ஸ்ரீஜித் ரவி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "திருச்சூர் பூங்காவில் கடந்த 4-ம் தேதி, 5 மற்றும் 11 வயது குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றார். அதுபற்றி குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்தனர். பூங்காவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் வந்தவரின் முகம் தெளிவாக தெரியவில்லை.

 



 

இந்த நிலையில் மறுநாளும் கறுப்பு நிற காரில் வந்த ஒருவர் அதே குழந்தைகளை பின் தொடர்ந்து பிளாட்டின் அருகில் உள்ள சந்து பகுதியில் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார். அது நடிகர் ஸ்ரீஜித் ரவி என தெளிவாக தெரியவந்தது. முதல் நாள் குழந்தைகளுக்கு அது யார் என்பது தெரியவந்தாலும், சந்தேகம் இருந்ததால் உறுதி செய்ய முடியவில்லை. தீவிர விசாரணை நடத்திய பின்னரே நடிகர் ஸ்ரீஜித் ரவியை கைது செய்தோம்" என்றனர்.

 

போலீஸ் விசாரணையில் நடிகர் ஸ்ரீஜித் ரவி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு ஒரு நோய் இருப்பதாகவும், மருந்து சாப்பிடாததால் அவஸ்தையை அனுபவிப்பதாகவும். அதனால் இப்படி நடந்துகொண்டதாகவும் ஸ்ரீஜித் ரவி போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நடிகர் ஸ்ரீஜித் ரவியை திருச்சூர் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

 

போக்சோ வழக்கு என்பதால் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஸ்ரீஜித் ரவியை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஸ்ரீஜித் ரவி மீது 2016-ம் ஆண்டும் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ள பத்திரிபால பகுதியில் ஸ்கூல் மாணவிகள் முன்னிலையில் நிர்வாணமாக நின்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.