நெல்லை மேலப்பாளையம் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி மாரியம்மாள்(40). செல்வகுமார் வெல்டிங் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். நெல்லை பீடி காலனி பகுதியில் இவர்கள் வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பிள்ளைகள் இருவரை பள்ளிக்கு அனுப்பி விட்டு வழக்கமான தனது பணிகளை மாரியம்மாள் செய்து கொண்டிருந்தபோது அவரது கணவன் செல்வகுமார் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த மற்றொரு மகன் இருவரையும் தடுக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாரியம்மாளை செல்வகுமார் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை கண்ட மகன் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது மகனுக்கும் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தகாயங்களுடன் மாரியம்மாள் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனை தொடர்ந்து மாரியம்மாளின் மகன் அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாரியம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸார் கொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பியோடிய செல்வகுமாரை தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் ஆதர்ஸ்பச்சோரா நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி கொலையாளியை பிடிக்க உத்தரவிட்டார். பட்டப்பகலில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மேலப்பாளையம் பகுதியில் மூன்று நாட்களில் இரண்டு கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.