அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானத்தில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தங்கத்தில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ராமர் கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய தங்கம் பயன்பாடு
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில், மொத்தம் 50 கோடி ரூபாய் மதிப்புடைய 45 கிலோ எடையுள்ள தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேச்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வளாகத்தில், முதல் தள பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ராமர் தர்பார் உள்ளிட்ட 8 சன்னதிகளுக்கான கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ராமர் கோயிலில் பயன்டுத்தப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு, வரிகளை தவிர்த்து சுமார் 50 கோடி ரூபாய் என அவர் கூறியுள்ளார்.
தூய தங்கம் எங்கெங்கு பயன்பாடு.?
அயோத்தி ராமர் கோயிலின் தரை தளத்தில் உள்ள கதவுகள் மற்றும் ராமரின் சிம்மாசனம், கிரீடம் ஆகியவற்றில் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், சேஷாவதர் கோயிலில் இன்னும் தங்க வேலைகள் நடந்து வருவதாகவும், ராமர் கோயிலின் முக்கிய கட்டமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அருங்காட்சியகம், கலையரங்கம், விருந்தினர் மாளிகை உள்ளிட்டவற்றின் கட்டுமானங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என்றும், ராமர் தர்பார் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ராமர் தர்பாரை பார்வையிட குறைந்த எண்ணிக்கையில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், ராம தர்பார் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்களை ஈர்த்துள்ளதாகவும், அதனை பார்வையிட வரும் பக்தர்களுக்கு நுழைவுச் சீட்டு மூலம் இலவச தரிசனம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மிஸ்ரா கூறினார்.
நன்கொடையாக கிடைத்த தங்க, வைர ஆபரணங்கள்
அயோத்தி ராமர் கோயிலுக்கென உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூரி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளைக்கு, குஜராத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நகை நிறுவனத்தின் உரிமையாளர், வைரங்கள் பதிக்கப்பட்ட 11 கிரீடங்கள், ஒரு தங்க வில்-அம்பு, 30 கிலோ வெள்ளி, 300 கிராம் தங்கம் மற்றும் மாணிக்கங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக, விஷ்வ இந்து பரிஷத் தேசிய பொருளாளர் தினேஷ் நெவாடியா தெரிவித்துள்ளார்.
மோடி பிரதிஷ்டை செய்த ஸ்ரீ பாலராமர்
அயோத்தி ராமர் கோயிலின் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற அந்த விழாவிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ பாலராமரின் பிராண பிரதிஷ்டை பூஜைகளில் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.