Nellai Mayor: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயருக்கான மறைமுக தேர்தலில், திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நெல்லை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல்:


நெல்லை மேயர் பதவியை வகித்து வந்த திமுகவைச் சேர்ந்த சரவணன், கடந்த மாதம் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளராக கிட்டு எனும் ராமகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். இவர் நெல்லை மாநகராட்சியின் மூன்றாவது வார்ட் கவுன்சிலராக உள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே என் நேரு உள்ளிட்டோர் தலைமையில்  நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ராமகிருஷ்ணன் ஒருமனதாக மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.


திமுகவிற்கு வெற்றி உறுதியா?


நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில்,  44 இடங்கள் திமுகவே வசமே உள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் இன்றைய மறைமுக தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக, கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 7 மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் திமுகவிற்கு உள்ளது. அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே நெல்லை மாமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.


நெல்லை மேயர் ராஜினாமா எதற்காக?


நெல்லை மாநகரத்தின் மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் மேயருக்கும், கவுன்சிலர்களுக்குமிடையே நடந்த  பனிப்போர் காரணமாக நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தாலும் கட்சிக்குள் நிலவிய பனிப்போர் காரணமாக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்களே மேயர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்ததோடு ஒவ்வொரு கூட்டங்களையும் புறக்கணித்தும் வந்தனர். இதனால் மக்கள் பணிகள் எதுவுமே நடைபெறாத நிலையில் நெல்லை மாநகராட்சி இருப்பதாக சொந்த கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த  நிலையில் திமுக தலைமை அறிவுறுத்தியதன் பேரில், சரவணன் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று மறைமுக தேர்தல்  மூலம், புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.


இதனிடையே, கோவை மாநகராட்சியின் மேயர் பதவியை வகித்து வந்த,  கல்பனா ஆனந்தகுமாரும் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கும் புதிய மேயரை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்ட்களில், பெரும்பாலான பகுதிகள் திமுக வசமே உள்ளன. இதனால், அந்த மாநகராட்சி தேர்தலிலும் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால், மேயர் பதவிகளுக்கு சரியான நபர்களை தேர்ந்தெடுக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது.