நெல்லை மாநகராட்சி புதிய மேயர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்கள்..!

”மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் மேயர் தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட உள்ளார்”

Continues below advertisement

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி எம் சரவணன் கடந்த ஜூலை மூன்றாம் தேதி தனதுபதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மேயர் பதவி இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நெல்லை மாநகராட்சியின் மேயர் தேர்தலை நடத்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக நாளைய தினம் (5.08.24) காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement


மேயர் வேட்பாளர் அறிவிப்பு:

இந்த நிலையில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட திமுக மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்த நிலையில் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே என் நேரு உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாநகராட்சியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களுடைய அறிவுறுத்தல் படி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை மேடையில் வைத்து அறிமுகம் செய்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர்கள் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். 

நெல்லை மேயர் ராஜினாமா எதற்காக?

நெல்லை மாநகரத்தின் மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் மேயருக்கும், கவுன்சிலர்களுக்குமிடையே நடந்த  பனிப்போர் காரணமாக நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தாலும் கட்சிக்குள் நிலவிய பனிப்போர் காரணமாக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்களே மேயர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்ததோடு ஒவ்வொரு கூட்டங்களையும் புறக்கணித்தும் வந்தனர். இதனால் மக்கள் பணிகள் எதுவுமே நடைபெறாத நிலையில் நெல்லை மாநகராட்சி இருப்பதாக சொந்த கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த  நிலையில் திமுக தலைமை அறிவுறுத்தியதன் பேரில் அவர் ராஜினாமா செய்தார்.  இந்த ராஜினாமா கடிதம் கடந்த 08.07.24 அன்று கூடிய மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒரு மனதாக மன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து துணை மேயர் ராஜூ மேயராக பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் இன்று புதிய மேயர் வேட்பாளரை ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்  ஒரு மனதாக முடிவு செய்து பின் அமைச்சர்கள் அறிவித்து சென்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola