Covai Nellai Mayor Election: கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளின் புதிய மேயர்களை தேர்தெடுப்பதற்கான, மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேயர் தேர்தல்:
கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் மற்றும் நெல்லை மேயராக இருந்த சரவணன் ஆகியோர், இம்மாத தொடக்கத்தில் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இருவருமே, ஆளும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காலியாக உள்ள கோவை மற்றும் நெல்லை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாமன்றக் கூட்டத்தை கூட்டி மறைமுக தேர்தல் மூலமாக மேயரை தேர்ந்தெடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மேயர் தேர்தல் அறிவிப்பு:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் திமுக பெரும்பான்மை பலத்துடன் உள்ளத்டு. இதனால் மறைமுக தேர்தலில், திமுக வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என கருதப்படுகிறது.
கோவை மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் யார்?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநகராட்சி குறித்து அனுபவம் வாய்ந்த ஒருவரை மேயராக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், மக்களின் குறைகளுக்கு தீர்வு கண்டு, தேர்தல் லாபத்தை பார்ப்பது குறித்தும் திமுக கணக்கு போட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவராக உள்ள மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள இலக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை, மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி, கோவை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் அம்பிகா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.
நெல்லை மேயர் தேர்தல்:
நெல்லை மேயர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. அந்த மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், 44 இடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது. மேலும் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் 7 பேரும் உள்ள நிலையில், அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
நெல்லை மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் யார்?
திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரை வெள்ளாளர் சமூக மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அதனால் அதே சமூகத்தை சேர்ந்தவர்களே இதுவரை பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போதும் அவர்களுக்கே கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
- 25 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருக்கும் ராமகிருஷ்ணன் என்ற கிட்டுவிற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக மாமன்ற உறுப்பினராக உள்ளார். ஐந்து முறை வட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.
- 27 வது வார்டு மாமன் உறுப்பினராக உள்ள எஸ். உலகநாதன் என்பவருக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் முதன்முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பல்வேறு பதவிகளுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டாவது வார்டு உறுப்பினரும், தற்போதைய துண மேயருமான ராஜுவே, மேயராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுகவின் நிரந்தர வாக்கு வழியாக கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பாப்பும் நிலவுகிறது.