ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் துறை ரீதியான ஆய்வுப் பணிக்காக இன்று நெல்லை வந்தார். அப்போது நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் அரசு  ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி, 12- ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதி மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், மாணவர்கள் தங்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை அமைச்சர் பாராட்டி கவுரவித்தார்.


முன்னதாக அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் பேசுகையில், “நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக உள்ளது. இந்த கடம்பன்குளம் ஆதித்திராவிடர் நல பள்ளி 12- ம் வகுப்பில் 100 சதவீதமும், 10- ம் வகுப்பில் 89 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த பள்ளியைச் சேர்ந்த  சந்தோஷ் முதலிடம் பிடித்துள்ளார் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிக முக்கியம். ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் கல்விதான் தீர்மானிக்கிறது. மாணவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை செல்போன் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்களை மதித்து நடப்பதுடன் அதிக மதிப்பெண்கள் எடுத்து அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழக முதல்வர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


திமுக ஆட்சியில்தான்  ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு அதிகமான விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது, பழைய கட்டிடங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி அவைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. கல்வியோடு மாணவர்கள் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நன்கு படித்து உயர்பதவிகளுக்கு செல்ல வாழ்த்துகிறேன்” எனக்கூறினார்.


இதனைத் தொடர்ந்து கங்கைகொண்டானில் உள்ள அரசு மாணவர் விடுதியையும் ஆய்வு செய்தார். அங்கு விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவிணை சாப்பிட்டு அதன் தரத்தையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், பொறுப்பு மேயர் ராஜூ, மூலக்கரைப்பட்டி பேரூர் செயலாளர் முருகையாபாண்டியன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.