கேரளா மற்றும் தமிழகத்தில் தேனி, கம்பம் பகுதிகளில் சுந்தரமாக சுற்றி வந்த அரிசிகொம்பன் (அல்லது) அரிக்கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.


அரிசிகொம்பன்:


கேரள மாநிலத்தில் பிறந்த அரிகொம்பன் தனது இரண்டு வயதில் தாயை இழந்ததால் செல்லும் திசை தெரியாமல் பயணித்த வேளையில் மலை கிராம மக்கள் கொடுத்த அரிசி பிடித்த மிகவும் பிடித்த உணவாக அமைந்ததால் அரிசி கொம்பனின் வலசைப்பாதை அரிசியுடன் மக்கள் வாழும் ஊருக்குள் என  மாறி போனது ! இந்த நிலையில் சின்னக்கானல் பகுதியில் உணவுக்காக ஓடிய யானையின் நடமாட்டத்தால் நேரடியாக இல்லை என்றாலும் யானையின் நேரில் பார்த்து பயந்து ஓடியது என மறைமுகமாக ஏற்பட்ட விபத்தால் மக்கள் சிலர் உயிரிழந்தனர் என சொல்லப்பட்டது. 


இதனையடுத்து அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்த கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தையொட்டிய பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விட்டுச்சென்றனர். அங்கிருந்து கடந்த மே மாதம் கம்பம் நகரில் குறிப்பாக  தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூர் ,சின்ன ஓவுலாபுரம், ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அடர்த்த காப்புக்காடு வனப்பகுதியில், அரிகொம்பன் யானை 7 நாட்களாக அடர்ந்த வனத்தில் முகாமிட்டது. அங்கு மக்களுக்கு அச்சம் ஏற்பட்டதாக குரல் எழுந்தது. பின் மீண்டும் யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் தொடர் முயற்சி மேற்கொண்டனர்.


மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு:


யானை சமதள பகுதிக்கு வந்ததும் எதிர்பார்த்தது நடந்தது. கடந்த நான்காம் தேதி இரவு கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின் ஐந்தாம் தேதி காலை தேனி மாவட்டத்தில் இருந்து வனத்துறையின் வாகனம் மூலம் வரும் வழியெல்லாம் மயக்க ஊசி செலுத்தி வீரப்பு துறை மீட்பு வீரர்கள் மூலம் ஆங்காங்கே யானை மீது தண்ணீர் பீய்ச்சிஅடித்து மிக பாதுகாப்பாக அரிகொம்பனை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மணிமுத்தாறு வாகன சோதனைச் சாவடி வழியாக அடர் வனப்பகுதியான மேலகோதையார் வனப்பகுதிக்கு  கொண்டு விட்டனர். மேல கோதையாறு பகுதியில் வனத்துறையினர் வன மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து தங்கி உள்ளனர். மேலும் யானையின் நடமாட்டத்தை அரிய அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியை பொருத்தி இருந்தனர்.  அதன் மூலம் அரிகொம்பன்  யானையின் இருப்பிடத்தை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணித்துக்கொண்டே இருந்தனர். ரேடியோ காலர் கருவி யானை செல்லும் இடம் குறித்த தகவல் முன்கூட்டியே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 




 


தவறான புகைப்படம்:


தொடர்ந்து யானையின் நடமாட்டம் நல்ல சீராக இருப்பதாகவும், சீராக உணவு எடுத்துக்கொள்வதாகவும் தமிழக வனத்துறை செயலாளர் அரிக்கொம்பன் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் யானை அணைப்பகுதியில் தண்ணீர் குடிக்கும் புகைப்படமும், அதனை தொடர்ந்து அணைப்பகுதியின் ஓரமாக இருக்கும் புற்களை பிடிங்கி அதனை நீரில் கழுவி அரிக்கொம்பன் உண்ணும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக அது குறித்த தகவலையும் வனத்துறை உயர் அதிகாரி சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இதனால் அரிகொம்பன் அடர்ந்த வனப் பகுதியில் வாழப்பழகிவிடும். மக்கள் இருப்பிடம் நோக்கி வராது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டது. 


இந்த நிலையில் இன்று காலை அரிக்கொம்பன் யானை, வனத்தில் மலைச்சரிவில் பச்சை பசேல் என்ற புல்வெளியில் ஓய்வெடுப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக அவர் பதிவிட்டிருந்த 5 மணி நேரத்தில் 27.9 ஆயிரம் பார்வையாளர்களை சென்றடைந்திருந்தது.பின் சிறிது நேரத்தில் அந்த வீடியோ கடந்த 2021 ல் புகைப்பட கலைஞர் சுபாஷ் என்பவர் எடுத்தது  எனவும் இந்த காணொளி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருப்பதாகவும் வனம் ஆர்வலர் வனம் சந்திரசேகர் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனை அடுத்து வனத்துறை அதிகாரி சுப்பிரியா சாகு, உடனடியாக தான் பதிவிட்டிருந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.


 



அரிக்கொம்பன் எங்கே?


இது ஒருபுறம் இருக்க.. தற்போது அரிக்கொம்பன் இருப்பிடம் எங்கே? அதன் கழுத்தில் மாட்டி இருக்கும் ரேடியோ காலர் நிலை என்ன? இந்த யானை தூங்கும் காட்சி பழையது என்றால் இதற்கு முன்பு அரிகொம்பன் யானை குறித்து வனத்துறை அதிகாரி பதிவிட்ட தகவல்களின் உண்மை தன்மை என்ன என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் பொழுது, அரிக்கொம்பன் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டு ரேடியோ காலர் மூலம் அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் அங்கு காவல்துறையினர் வனத்துறையினர் என அதிகாரிகள் முகாமிட்டு அதனை கண்காணித்து வந்தனர்.


தற்போது அரிக்கொம்பனின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த ரேடியோ காலர் மூலம் பெறும் தகவல் நிறுத்தப்பட்டுள்ளது. சிக்னல் சரியாக கிடைக்காததால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோதையர் அணை பகுதி மற்றும் மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், பாதுகாப்பு கருதி அப்பர் கோதையாறு அணைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டனர் என தெரிவித்தார். இதனால் அரிக்கொம்பனின் தற்போதைய நிலையை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரிக்கொம்பன் தற்போது எங்கு உள்ளான்? அதன் நிலை என்ன? எதனால் சிக்னல் தடைபட்டுள்ளது என பல்வேறு கேள்விகள் எழுகிறது. இதனிடையே அரிக்கொம்பன் அப்பகுதியில் விடப்பட்ட ஓரிரு நாளில் ஊருக்குள் வந்ததாகவும் டயர் போன்றவற்றை கொளுத்தி  காட்டி வனத்திற்குள் அனுப்பியதாகவும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண