கோவில்பட்டியில் தனது மகனின் திருமண அழைப்பினை, திருக்குறள் விளக்கவுரை புத்தகத்துடன் அச்சிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூடிய தாம்பூல பையில் சில்லுக்கருப்பட்டியுடன் விருந்தினர்களுக்கு வழங்கி அசத்திய ஒரு குடும்பத்தினர்தான் இன்று Talk of the Town.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தாயப்பா அ.கார்த்திகேயன். இவர் பல் மருத்துவர், மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவி முனைவர் கோப்பெருந்தேவி (எ) ஜெயந்தி, தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியாக பணியாற்றியவர். இந்த தம்பதிக்கு ராஜவேல், மணிவேல் என்ற 2 மகன்கள், இதில் மூத்த மகன் ராஜவேல் தற்பொழுது ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார். வரும் 25-ஆம் தேதி ராஜவேலுவிற்கும் கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன்தேவர்குளத்தினை சேர்ந்த ஜோதி லெட்சுமி என்பவருக்கும் அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமணத்திற்கு அழைப்பிதழ் அடிப்பது தொடர்பாக குடும்பத்தினர் ஆலோசனை நடத்திய போது, திருமண அழைப்பிதழ் வெறும் காகிதமாக இல்லாமல் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று யோசித்துள்ளனர். அந்த வகையில் உலக பொது மறை திருக்குறளை, அதற்கான விளக்க உரையுடன் திருணம அழைப்பினையும் இணைத்து புத்தக வடிவில் வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். மேலும் புதுமாப்பிளை ராஜவேலின் தாயார் தமிழ்த்துறை பேரரசிரியர் என்பதால் அவரே திருக்குறளுக்கு விளக்கவுரை எழுத முடிவு செய்தார். அது மட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து அனைவரின் இல்லங்களில் சென்று சேரும் வகையில் திருமண தாம்பூலப் பையில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறும் வகையில் தயார் செய்ய முடிவு செய்தனர்.
இதையெடுத்து முனைவர் கோப்பெருந்தேவி (எ) ஜெயந்தி எழுதிய விளக்கவுரையுடன், திருக்குறள் புத்தகம் அச்சிட்டனர். புத்தகத்தின் முதல் பக்கத்தில் மணமக்கள் பெயர், திருமணம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து திருக்குறள் மற்றும் விளக்கவுரைகளும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 296 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தக அழைப்பிதழ் உள்ளது. மொத்தம் 1500 புத்தக திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளனர். இந்த திருக்குறள் விளக்கவுரையுடன் கூடிய புத்தக வடிவ திருமண அழைப்பிதழுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அணிந்துரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தக அழைப்பிதழ் மட்டுமின்றி, அதனை வழங்க பயன்படும் தாம்பூல மஞ்சள் பையில் ஒரு புறம் மணமக்கள் பெயரும், மறு பக்கம் தமிழ்த்தாய் வாழ்த்தும் அச்சிட்டுள்ளனர். புத்தக வடிவில் திருமண அழைப்பிதழ், தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூடிய மஞ்சள் பை மட்டுமின்றி பனைத்தொழிலாளர்கள் வாழ்விற்கு உதவும் வகையில் பனையில் தயாரிக்கப்பட்ட சில்லுகருப்பட்டியையும் இணைத்து தங்களது உறவினர்களுக்கு அந்த குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர்.
திருமண அழைப்பிதழ் வெறும் காகிதமாக இருக்கமால் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தக அழைப்பிதழ் வழங்கும் இந்த குடும்பத்தின் முயற்சி பாராட்டுக்குரியது மட்டுமின்றி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர்