நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் தனியார் குவாரிகள் கடந்த 14- ந்தேதி பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது, இதில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இருவர் உயிரிழந்தனர், இந்நிலையில் மேலும் இருவர் பாறைகளின் இடுக்குகளில் சிக்கி உள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 


இன்னொருவர் இருக்குமிடம்  கண்டறியப்பட்டு அவரை மீட்கும் பணி நடந்தது. ஆனால் ராட்சச பாறையின் அடியில் அவர் சிக்கியுள்ளதால் பாறையை வெடிவைத்து தகர்த்து அவரை மீட்கும் பணி இன்று காலை துவங்கியது. விபத்து நடந்த குவாரியில் 22 முதல் 25 அடி உயரம் கொண்ட ராட்சத பாறைகள் சரிந்த நிலையில் உள்ளது. இதனடியில் தான்  ஆறாவது நபரின் உடல்  இருப்பதாக கூறப்படுகிறது,  32 ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு இந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஜெலட்டின் குச்சிகளும் 50 முதல் 125 கிராம் எடையுள்ள வெடிமருந்துகள் மொத்தம் மூன்றரை கிலோ வெடிமருந்து பொருத்தப்பட்டுள்ளது. இதில்  ஆறு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் முதல் நிலை அலுவலர் என்று சான்று பெற்ற நபர்கள் 4  பேரும் பாறைகளின் கடினத் தன்மையை அறிந்து எப்படி வெடிகளை வெடிக்கச் செய்யலாம் என்று கணக்கிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட பின்னர் சிதறிய பாறைகள் அனைத்தும் அகற்றும் பணி மாலை 4 மணிக்குப் பின்னர் தொடங்கியது. அதன் பின்னரே இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது.


இந்த சூழலில் இந்த விபத்திற்கு காரணமான குவாரி உரிமையாளர்களான சங்கர நாராயணன், மற்றும் செல்வராஜ் அவரது மகன் குமார், மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சங்கர நாராயணனை காவல்துறையினர் கைது செய்தனர், மேலும் செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர், இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கபட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர், இந்த நிலையில் கர்நாடக  மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியிருப்பது காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


முன்னதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதூரவேதி நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் போலீசார் தீவிர விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விசாரணையின் ஒருபகுதியாக குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரின்  திசையன்விளையில் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதூர்வேதி  தலைமையிலான போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி  விபத்து நடந்த குவாரியில் உள்ள அலுவலகத்தின் பூட்டினை  வருவாய்துறை முன்னிலையில் உடைத்து  பல மணிநேரம் சோதனையிட்டனர். இந்த சோதனையில்  பல்வேறு ஆவணங்கள், முக்கிய கோப்புகள், எவ்வளவு கற்கள் வெளியில்  கொண்டு செல்லப்பட்டது, உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ரசீதுகள் ஆகியவற்றை   கைப்பற்றி சென்றனர். சோதனையின் முடிவில் நீதிமன்ற ஆணையை அலுவலக கதவில் ஒட்டினர். பின்னர் அலுவலகத்தை பூட்டி சீல்வைத்து சென்றனர்.