தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைநகரங்களில் திமுகவினரோடுஅமைச்சர்கள் மற்றும் எம்.பி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் பங்கேற்றனர்.




உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முடித்து வைத்து பேசினார். அப்போது, தி.முக. நீட் தேர்வு தேவை இல்லை என்று தொடர்ந்து போராடி வருகிறது. அதன் நீட்சியே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இது மாணவர்கள் போராட்டமாக, மக்கள் போராட்டமாக மாற வேண்டும். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும். அந்த நிலையை மாற்றியது தி.மு.க. சாதாரண ஏழை, எளிய மக்களின் குழந்தைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வை கலைஞர் ரத்து செய்தார். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார். ஏழை, எளிய மாணவர்களும் டாக்டர்களாக உருவானார்கள்.




இது யார் கண்களை உறுத்தியதோ தெரியவில்லை. இன்று நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது. சிலர் நீட் தேர்வில் நம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்று கூறுகிறார்கள். என்ன தடை வந்தாலும் எங்களால் தாண்ட முடியும். ஆனால் அந்த தடையை உருவாக்க உங்களுக்கு உரிமை இல்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கவர்னர் எந்த சூழலிலும் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட மாட்டேன் என்று கூறுகிறார். நம்முடைய கல்வி என்ற ஆயுதத்தை தட்டி பறிக்க நினைக்கிறார்கள். நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் என்றார்.




அமைச்சர் கீதாஜீவன் போராட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, "தி.மு.க.வை பொறுத்தவரை தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. நீட் தேவை உள்ள மாநிலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி சில மாநிலங்களில் நீட் அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்துக்குள் நீட் தேர்வு வந்தது. கவர்னர் அரசுக்கு எதிராக எல்லா செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார் என்றார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது, மத்திய அரசு உள்நோக்கத்தோடு தமிழக அரசை வஞ்சிக்கிறது. பல்வேறு வகையில் நீட் தேர்வை கொண்டு வர முயன்றும், ஜெயலலிதா இருக்கும் வரை இங்கு நீட் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தான் தமிழகத்தில் அது நடைமுறைக்கு வந்தது. இதற்கு காரணம் அ.தி.மு.க தான்" என்று கூறினார்.