நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு ரத்து மசோதாவில் கையெழுத்து போட மறுக்கும் ஆளுநரை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகிய அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்தா மருத்துவக் கல்லூரி எதிரே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், டி.பி.எம் மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தப் போராட்டத்தை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார். இந்த போராட்டத்தில் இளைஞர் அணியினர் மாணவர் அணியினர் மருத்துவ அணியினர் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


மாலையில் போராட்டத்தின் நிறைவாக இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பேசுகையில், ”முதலமைச்சர் எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, தற்போதும் சரி ஆரம்ப காலத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்.. மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்துவதற்கு எந்த ஒரு பெரிய காரணமும் இல்லை, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே உணவு, ஒரே ஆடை என்ற எண்ணத்தில் இருக்கும் பாஜக அரசு ஒரே கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் கொண்டு வந்து ஏழை, எளிய மக்களுக்கு  எந்த ஒரு பயனும் இல்லாமல் சமூக நீதியை காக்க தவறிய அரசு தான் பாஜக அரசு. ஆனால் நமது திமுக நல்ல திட்டமாக இருந்தால் எந்த கட்சி கொண்டு வந்தாலும் அதை வரவேற்போம்.


ஆனால் அது என்று சமூக நீதிக்கோ, பகுத்தறிவிற்கோ, சுயமரியாதைக்கோ, சமத்துவத்திற்கோ எதிராக இருக்கிறதோ அதை எந்த அரசு கொண்டு வந்தாலும் அதனை எதிர்க்கும் தன்மையுள்ள அரசு திமுக. கிராமப்புற மாணவர்கள் அதிக செலவு செய்து படிக்க முடியாது என்பதற்காக தான் முதல்வரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து நீட்டை முற்றிலும் எதிர்க்கிறோம், பாஜக அரசு எத்தனை அழுத்தங்கள் தந்தாலும், நீட் கொண்டு வர உறுதியாக இருந்தாலும் அந்த எண்ணத்தை  திமுக தலைவர், கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்து நீட்டை தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்போம் என்றார்.




ஏ கே ராஜன் குழு மிகத் தெளிவாக 165 பக்க அறிக்கையில் 86 ஆயிரத்து 342 பேரிடம் கருத்து கேட்டு நீட் தேர்வு தேவை இல்லை என கூறியுள்ளது. இந்தத் தேர்வின் மூலம் தமிழகத்தில் இதுவரை  17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நீட் தேர்வு சிபிஎஸ்சி கல்வித் திட்டத்திற்கும் ஆங்கில முறை கல்வித் திட்டத்திற்கும் ஆதரவாகவே உள்ளது ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீட் பயிற்சி மையம் என 5,750 கோடி ஆண்டுக்கு வணிகம் நடந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி கிடைப்பது கேள்வி குறிதான். எனவே நீட் தேர்வை  எதிர்ப்பதில் அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது” என தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் பழ ஜூஸ் வழங்கி போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.