தமிழக சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திருப்புமுனை என்னும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இத்திட்டம் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் சாரு ஸ்ரீ சமூக நலத்துறை பாதுகாப்பு இயக்குனர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.




தூத்துக்குடியில் துவங்கப்பட்ட குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திருப்புமுனை திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், பள்ளியில் இடைநீற்றல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் பெற்றோரின் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளுக்கு இல்லங்களில் சேர்த்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு குறிக்கோளுடன் இந்த திருப்புமுனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.




அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு இது குறித்தான விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி பொதுவாக உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் குழந்தைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டிலேயே குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை தமிழகத்தில் தான் உள்ளது. அதனை செயல் வடிவத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் கீதா ஜீவன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தி பல நோய்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் 8% மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாகவும் இந்த மாணவர்களை பள்ளியில் படிக்க தொடர செய்ய வேண்டும் உயர்கல்வி வழங்க வேண்டும், அப்போதுதான் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க முடியும் என யூனிசெப் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் திருப்பமுனை திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு ஆண்டு ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று கணக்கெடுத்து வருகிறோம். அந்த விவரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் இந்த திட்டம் வெற்றி பெறும் என தெரிவித்தார்