கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே தென்னை நார் சொழிற்சாலையில் வட மாநில தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். தலைமறைவான சக வடமாநில தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள கீழமணக்குடி பகுதியில் முகிலன்குடியிருப்பை சேர்ந்த ஸ்ரீவேலன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கவும் தங்கவும் தொழிற்சாலை வளாகத்தில் இரண்டு அறைகள் உள்ளன. இதில் பீகார் மாநிலம் ஷம்புஷாக் பகுதியை சேர்ந்த நானாக்க்ஷா(30) மற்றும் ரமேஷ்(32) ஆகியோர் தங்கி உள்ளனர். அறையில் இரண்டு பேரும் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் வடமாநில தொழிலாளி தங்கியிருந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆலையின் காவலாளி செல்வன் என்பவர் கதவை தட்டிபார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தலையில் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் நானாக்ஷா இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி மில் உரிமையாளருக்கும், தென்தாமரைகுளம் காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி‌ மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

 

 


 

அப்போது முன்னாவுடன் தங்கி இருந்த ரமேஷ் என்பவரை காணவில்லை. இதனால் ரமேஷ் முன்னாவை கொலை செய்திருப்பார் என்ற கோணத்தில் போலீசார் ரமேஷை தேடி வருகின்றனர். இந்நிலையில் ரமேஷும் நானாக் ஷாவும் நேற்று இரவு மது அருந்தியதாகவும் போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 



 

அண்மை காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல வழிமுறைகளை பின்பற்றிய போதிலும் கொலை, கொள்ளை என்பது தொடர்கதையாக உள்ளது. பெரும்பாலான கொலை சம்பவங்களில் இதுவரை துப்பு துலக்க முடியாத சூழ்நிலை உள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 1200 போலீசார் பணியில் உள்ள நிலையில் காவல் நிலையங்களில் போதிய போலீசார் இல்லை என கூறப்படுகிறது. காலி பணி இடங்களை விரைவாக நிரப்பி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.