குமரி தமிழக -கேரளா எல்லையில் அமைந்துள்ள முக்கிய  சோதனை சாவடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் திடீர் ஆய்வின் போது தூங்கிக் கொண்டிருந்த காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி , கனிமவள கடத்தலை தடுக்க  தமிழக கேரள  எல்லை பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுக்க கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் முறையாக வேலை செய்யவில்லை என்றும் லஞ்சம் வாங்கிவிட்டு கடத்தலுக்கு துணை போகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது குறிப்பாக குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளம் கடத்தல் என்பது நடைபெற்று வருகிறது. கனிம வள கடத்தலை தடுக்க பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த பின்பும் கூட நல்ல இரவில் லாரி லாரியாக கனிம வள கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் டாரஸ் வண்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிக எடை கொண்டு செல்லப்படுகிறது. இதனை தடுக்க குமரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

 



 

இந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹிரன் பிரசாத் திடீர் எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு  மேற்கொண்டார். அப்போது தமிழக கேரள எல்லை இணைக்க  கூடிய முக்கிய பகுதியாக களியக்காவிளை சோதனைசாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது, மார்தாண்டம் காவல் நிலைய காவலர் ஜெயகுமார் என்பவர் பரபரப்பாக இருக்கும் இரு மாநில எல்லையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில் கடமை உணர்வை மறந்து தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த காவலர் ஜெயகுமாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்தார். மேலும் மாவட்டத்தில் இது போன்று கடமை உணர்ச்சியை உணராமல் செயல்படும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார்.

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இத்தகைய அதிரடி நடவடிக்கை கண்டு போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் VISIBLE POLICE திட்டம் என்ற பெயரில் பல சீர்திருத்தங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.