சிவகாசி அருகே ஊராம்பட்டியில் பகுதியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உரிமை பெற்ற இந்த பட்டாசு ஆலையில் புஷ்வானம் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுந்தரராஜ், குமரேசன், இருளாயி, அய்யம்மாள் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் வந்தது. பின்னர் படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய 2 பேர்  முதலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


தொடர்ந்து இருளாயி, மற்றும் அய்யம்மாளுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அய்யம்மாளும் பின் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் இருளாயி என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு ஆலை போர்மேன் காளியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   இந்த சூழலில் இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.




செந்தில்குமார்


இதே போல  நேற்று சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான வேணி பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக  வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பட்டாசு கடையில் பணிபுரிந்த கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) என்பவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பட்டாசு கடை உரிமையாளர் வைரமுத்துவை தேடி வருகின்றனர். இரண்டு நாட்களில் மட்டும் பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண