எட்டயபுரம் அருகே காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம் அருகே க.குமரெட்டையாபுரம் கிராமத்தைச் சுற்றிலும் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான உயர் அழுத்த மின்கம்பங்களை க.குமரெட்டையாபுரம் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் பகுதியில் அமைத்து வருவதாக கூறி கிராம மக்கள் கடந்த மார்ச் 3-ம் தேதி கண்மாயில் குடியேறி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மார்ச் 8-ம் தேதி விளாத்திகுளத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து 9-ம் தேதி கிராமம் முழுவதும் மக்கள் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படை பொதுமக்கள் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தனர். அங்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், கோட்டாட்சியர் வழியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மின்கம்பங்கள் மாற்றுவழியில் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காற்றாலை நிறுவனம் தொடர்ந்து ஊருக்குள் உயர் அழுத்து மின்கம்பம் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் காற்றாலை நிறுவனத்தின் பணியை தடுக்கும் விதமாக வாகனங்களை மறித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என கூறி போராட்டம் நடத்தினர். நேற்று கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், க.குமரெட்டையாபுரம் கிராமத்துக்கு நேரில் வந்து, கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே, கிராம மக்களிடம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கடிதத்தில், கே.குமரெட்டையாபுரம் கிராமம் வழியாக காற்றாலை நிறுவனத்தால் மின் கம்பங்கள் அமைக்க கிராமமக்கள் தொடர்ந்து கடுமையான ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். மின் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக மார்ச் 13-ம் தேதி கோவில்பட்டி கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு, பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதால், அதுவரை க.குமரெட்டையாபுரம் பகுதிக்குள் எந்தவித பணியும் நடைபெறாதவாறு கண்காணித்துக் கொள்வதாக வருவாய்த்துறை சார்பில் உறுதி அளிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.