நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பால் நிறுவனத்தில் இருந்து நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தினம் தோறும் 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தில் இருந்து தினசரி 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களில் கூடுதல்களாக பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்த நிலையில் நேற்று இரவு ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா மற்றும் சாந்தி ஆகியோர் தெற்கு பஜார் பகுதிக்கு பால் கொண்டு செல்லும் வாகனத்தை சோதனை இட்ட போது அதில் கணக்கில் வராத 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


உடனடியாக அந்த பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் பெருமாள் புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் ஆவின் நிர்வாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக எத்தனை நாட்கள் இந்த மாதிரி பால் திருட்டு நடைபெற்றது என்பது குறித்தும், இதில் ஆவின் ஊழியர்களுக்கு தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஆவின் நிர்வாகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு மட்டும் ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான பால்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தினமும் எத்தனை வாகனங்களில் இது மாதிரியான பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் எத்தனை லட்சம் ரூபாய் ஆவின் நிர்வாகத்திற்கு நஷ்டம் என்பது காவல்துறையின் முழு விசாரணையில் தெரியவரும். இச்சூழலில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லோடுமேன் மன்சூர், டெஸ்ட்பாட்ச் கிளார்க் ஆசை தம்பி, பால் முகவர் ரமேஷ், உதவியாளர் அருண் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண