தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று தமிழகத்தில் டாஸ்மாக்  மதுபான கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த கோரியும் பனை கள் மற்றும் தென்னை கள் இறக்க இந்த அரசு அரசாணை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் தருவையில் போராட்டம் நடைபெற்றது. அகரத் தமிழர் கட்சித் தலைவர் குயிலி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தலைவர் ஜே.வி.மாரியப்பன்  பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கையில் பனை ஓலையில் பதநீர்  குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பனைமரம் அழிந்து வருகிறது. எனவே அவற்றை பாதுகாக்க தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியதோடு டாஸ்மாக்கால் மிகவும் கஷ்டப்படுகிறோம், டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் சீரழிகிறது. எனவே கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்தனர். 




இந்த நிலையில் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரையும் மது போதைக்கு அடிமையாக்கியுள்ளதாக கூறி தமிழகம் முழுவதும்  நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நெல்லை மாவட்டத்தில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சகாய இனிதா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலி மது பாட்டில்களில் மதுவை போல டிகாஷன் காபி கலவையை ஊற்றி கொண்டு வந்தனர், தொடர்ந்து பூரண மதுவிலக்கு அறிவிக்க வேண்டும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என முழக்கமிட்டபடியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அப்போது அவர்களை 300 மீட்டர் தொலைவில் எம் ஜி ஆர் சிலை அருகே தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்ட 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண