தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு மாணவர் திருப்பதி வெங்கடேஷ், பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் காட்சன் சாமுவேல், ஆத்தூர் ராஜசேகரபாண்டியன் என ஒரு குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆத்தூர் குளம் ஆழப்படுத்தும் பணி நடந்தது. அங்கு இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மண் ஜாடியின் வாய்பகுதி, பழமையான ஆபரணம், முழு வடிவ உலை மூடி, சுண்ணாம்பு தடவிய கலச ஓடுகள் என பல தொன்மையான பொருட்களை அந்த குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதில் மண் ஜாடியின் வாய் பகுதி அழகானதாகவும் மற்றும் வலுவானதாக இருந்துள்ளது. மேலும் இது கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. இதன் வாய் பகுதி எட்டு மில்லி மீட்டர் சுற்றளவைக் கொண்டதாக இருந்துள்ளது. இது முற்காலத்தில் எண்ணெய் போன்ற திரவங்களை நிரப்பிவைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.அதே போல் ஆபரணப் பொருள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதன் 6 மில்லி மீட்டர் நீளத்திலும் 3.5 மில்லி மீட்டர் அகலத்திலும் காணப்பட்டது.மேலும் முழு வடிவ உலைமூடி ஒன்றும் இதில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுண்ணாம்பு தடவிய கலச ஓடுகள் ஏராளமானவை கண்டெடுத்தனர்.
இதற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் மண் ஜாடியின் வாய்பகுதியை காலக்கணக்கீடு செய்வதற்காக உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் உள்ள பீர்பால் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் மொர்த்தகாயிடம், ஆய்விற்காக பேராசிரியர் சுதாகர் அனுப்பி வைத்தார்.இந்த மண்ஜாடிகள் லகனோ ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி, இந்த பொருள் 1890 ஆண்டு பழமையானது என கண்டறியப்பட்டது.தற்போது ஒரு ஜாடியின் மூடியை மட்டுமே ஆய்வு செய்துள்ளனர். அதன் வயது தான் இது. மேலும் இங்கு கிடைத்த மற்ற பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த பொருள்களின் ஆய்வு வெளிவரும்போது மேலும் நல்ல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முனைவர் சுதாகர் கூறும் போது, “இந்த காலகட்டம் தொல்லியல் துறைக்கு பொற்காலமாகும். ஒரு காலகட்டத்தில் கார்பன்டேட்டிங் உள்பட பல ஆய்வுகளுக்கு நாம் பொருள்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு காத்து இருப்போம். தற்போது நமது இந்தியாவில் உள்ள ஆய்வகத்திலேயே எல்லா பொருள்களையும் ஆய்வு செய்ய வசதி உள்ளது. அதன்படியே தற்போது ஆத்தூரில் கிடைத்த பொருளை லக்னோ பீர்பால் ஆய்வு மையம், ஆய்வாளர் மொர்த்தகாய் மூலமாக ஒரு ஜாடியின் மூடியை மட்டும் ஆய்வு செய்துள்ளோம். இதன் வயது தற்போது 1890 என முடிவு செய்துள்ளனர். மேலும் பல பொருள்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். சுண்ணாம்பு தடவிய கலயங்களின் காலங்கள் ஆய்வில் உள்ளது. அதன் ஆய்வு முடிவு வரும் போது இந்த பகுதி மக்கள் சுண்ணாம்பு பயன்படுத்திய காலங்கள் வெளியே தெரியவரும். மேலும் இதுபோன்ற ஆய்வு முடிவுகளை எதிர்நோக்கும் போது தமிழர்களின் பாரம்பரியம், தமிழர்களின் பண்பாடு, தொழில்கள் பற்றி தகவல்கள் வெளியே தெரியவரும். எனவே தொடர்ந்து ஆய்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்துள்ளோம்” என்றார் .