நெல்லை மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு அது அதிகனமழையாக பெய்து வருகிறது. குறிப்பாக நாளை மதியம் வரை மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப மாவட்டம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உயர் அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு பகுதியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவாய், காவல், மின்சாரம், தீயணைப்பு துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து அந்த அந்த பகுதிகளில் பணிகளை செய்து வருகின்றனர்.


நெல்லையில் அதிகனமழை:


கிட்டத்தட்ட 245 முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 20 முகாம்களில் 985 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை அளவை பொறுத்தவரை சராசரியாக 25.5 செ.மீ மழை பொழிந்திருக்கிறது. குறைந்த பட்சமாக சேர்வலாறில் 17 செ.மீ, அதிகபட்சமாக மாஞ்சோலையில் 35 செ.மீ மழை பெய்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர் தேங்கி நிற்கிறது. அந்த பகுதிகளை கண்டறிந்து அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து மக்களை முகாம்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம்.   


நெல்லை மாவட்டத்திற்கு 1 ஐ.ஏ.எஸ். அதிகாரியும், 4 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு  பணிகளை மேற்கொண்டுள்ளனர்.  மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து பகுதிகளிலும் மீட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதே போல பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை கண்காணிக்க உயர் மட்ட குழுக்கள், அதே போல களப்பணி குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் 60 ஜேசிபி, புறநகர் பகுதியில் 150 ஜேசிபி தயார் நிலையில் உள்ளது.


கரைபுரண்டு ஓடும் தாமிரபரணி:


அதே போல எல்லா பகுதிகளிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நீர் வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 85 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை நீர் வரத்து செல்லும். தற்போது 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  25 செ.மீ என்பது வரலாறு காணாத மழை என்பதால் ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதுவும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதுவும் காலை மழை நிற்பதை பொறுத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தாமிரபரணி ஆற்றில் 37 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


மிர1992களில் மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் வந்தது. தரைப்பகுதியில் மழை என்பது இல்லை. ஆனால் தற்போது மலைப்பகுதிகளிலும் அதி கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதோடு தரைப்பகுதிகளிலும் 25 செ.மீ அளவிற்கு அதிகமாக உள்ளது. அதனால் மழை நிற்கும் வரை பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கம் இருக்கும். அதனால் முயன்ற அளவில் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெள்ள நீர் கால்வாயில் 300 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடரில் மூன்று குழுவும், மாநில பேரிடரில் மூன்று குழுவும், நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளது என தெரிவித்தார்.