நெல்லை மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் அணையில் இருந்து சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலில் கலக்கும் உபரி நீரை கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி ஆறு, நம்பியாறு, மற்றும் கருமேனி ஆறு இணைப்புத் திட்ட வெள்ள நீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கன்னடியன் கால்வாயில் இருந்து சபாநாயகர் அப்பாவு இதனை திறந்து வைத்தார்.


கடந்த திமுக ஆட்சியின்போது  முதலமைச்சர் கலைஞரால் தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரை தாமிரபரணி ஆறு  கன்னடியன்  அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இத்திட்டப் பணிகள் கலைஞரால் 21.02,2009 அன்று  துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டப் பணிகள் முழுமை பெற்றுள்ளது. குமரி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து சுமார் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கலைஞரின் கனவு திட்டமான வெள்ளநீர் கால்வாய் பணிகள் முழுமை அடைந்துள்ள நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ளநீர் கால்வாயில் சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி அருகே உள்ள வெள்ளங்குளி என்ற பகுதியில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு கலந்து கொண்டு கொட்டும் மழையில் நனைந்தபடி கால்வாயிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார்.




இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலைஞரின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தில் வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டபணி 989 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் . நெல்லை  மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன் பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள், 2,657 கிணறுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் ஆக மொத்தம் 50 கிராமங்கள், 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன் பெறும். விரைவில் இந்த திட்டப்பணிகளை முதல்வர் அவர்கள் தனது காரணங்களால் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.