கல்வி அறிவில் முதலிடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் மூட நம்பிக்கையால் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் ஐஸ்வரியமும், செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுண்ட் மூலம் பத்தணம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ள வைத்தியர் பகவல் சிங்கை தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியுள்ளார்.

 

முஹம்மது ஷாஃபி எர்ணாகுளம் சென்று காலடி பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்து வந்து, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்து வந்த ரோஸ்லி(59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி திருவல்லா அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். உடலை வைத்து சில பூஜைகள் செய்துள்ளனர். பூஜை முடிந்த பிறகு வீட்டிற்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்துள்ள பகுதியில் குழிதோண்டி உடலை புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்துள்ளனர்.

 



 

முதல் பூஜையால் பலன் கிடைக்காததால் மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்தனர். கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த பத்மா(52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாக கூறி திருவல்லா அழைத்துச்சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரது உடல்களையும் துண்டுதுண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர்.

 

ரோஸ்லியை காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரது மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்பு துலங்கவில்லை. பத்மாவை காணவில்லை என அவரது மகன் செல்வராஜ் கடந்த மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சி.சி.வி.டி வி காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பத்மாவை கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

 

இதையடுத்து பாரம்பர்ய வைத்தியர் பஜவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ரோஸ்லி, பத்மா ஆகியோரது உடல் துண்டுகள் தேடி எடுக்கப்பட்டன. அவர்களது உடலை அடையாளம் காணும் விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த வழக்கின் தொடர் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.