தூத்துக்குடியில் தெற்கு, வடக்கு மாவட்டம் சார்பில் தனித்தனியாக கனிமொழிக்கு வரவேற்பு - வீரவாள் அளித்த கீதாஜீவன்.
சென்னையில் நடந்த தி.மு.க 15-வது பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. துணை பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பியை நியமித்தார். இதனை தொடர்ந்து துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் அருகே வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு மேளதாளங்கள் முழங்கவும், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக சால்வை, மலர் கொத்து வழங்கியும், மாலை அணிவித்தும், வீரவாள் வழங்கியும், மலர்கிரீடம் அணிவித்தும் வரவேற்றனர்.
பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறும் போது, “தலைவர் என் மீது நம்பிக்கை வைத்து ஒரு பொறுப்பை தந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நிச்சயமாக அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக, எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யும் வகையில் என் பணிகள் இன்னும் அதிகமாக இருக்கும். எனக்கு இந்த வாய்ப்பை அளிக்க காரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட மக்களின் அன்பு, என்மீது அவர்கள் வைத்து இருக்க கூடிய நம்பிக்கை மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள், முன்னணி தலைவர்கள், ஒவ்வொரு பகுதியில் உள்ள தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து, மறுபடியும் எங்களை ஒரு போராட்டத்துக்கு தள்ளிவிடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். மத்திய அரசு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள், மொழிகள் இணைந்ததுதான். வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த வேற்றுமையை தகர்க்கும் போது, ஒற்றுமைக்குதான் ஆபத்து என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மொழியை எல்லோரும் பேச வேண்டும் என்று திணிக்கக்கூடிய நிலையை உருவாக்குவது, மக்கள் மனதில் அதனை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலைதான் வரும். இந்தி பிரச்சினையை மறுபடியும், மறுபடியும் கொண்டு வருவது அவர்கள் செயல்படாமல் இருப்பதை திசை திருப்புவதற்காகத்தான் என்று நமக்கு தோன்றுகிறது. தேவையின்றி மொழி திணிப்பை கொண்டு வருகிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் எப்படி செயல்படுகிறார் என்பதை சொல்வதற்கு தகுதியும், அருகதையும் உள்ளவர்கள் அதனை கூற வேண்டும். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியை உதாரணமாக எடுத்து பேசும் அளவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார்” என்றார்