தூத்துக்குடியில் அமைந்துள்ள ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணி சர்சைகளை கிளப்பியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆர்.டபிள்யூ.டி.இ.ஆஷ். இவர் 1911-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சிநாதனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்திய விடுதலை இயக்கத்தில் இந்த சம்பவம் முக்கிய நிகழ்வாக அமைந்தது.




இந்த சூழ்நிலையில் ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் 1912-ம் ஆண்டு நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விசுவாசிகள், பொதுமக்கள் 88 பேரிடம்  நன்கொடை வசூலித்து சிறிய பூங்காவுடன் இந்த மணிமண்டபத்தை அமைத்துள்ளனர். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி தூத்துக்குடி சப் கலெக்டராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஏ.ஆர்.காக்ஸ் என்பரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1913-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி திருநெல்வேலி தற்காலிக ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஜே.சி.மெலானி என்பவரால் இந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலையும், கடற்கரை சாலையும் சந்திக்கும் பகுதியில் எட்டுத் தூண்களுடன் எண்கோன மண்டபமாக இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.




நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்த நினைவு மண்டபம் பராமரிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. முட்செடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி சிதிலமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்தது இந்த நினைவு மண்டபம். பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து கடந்த சில ஆண்டுகளாக தனியார் கல்வி அறக்கட்டளை ஒன்று இந்த நினைவு மண்டபத்தை சுத்தப்படுத்தி பராமரித்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள புராதன கட்டிடங்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடியில் 5 பழமையான கட்டிடங்களை தேர்வு செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்று தான் ஆஷ் நினைவு மண்டபமும்.




இந்த மண்டபத்தில் புதிதாக புல்தரை அமைத்தல், வர்ணம் பூசுதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று, தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது ஆஷ் நினைவு மண்டபம். இந்த பணிகள் தான் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆஷ் என்பவர் நமது நாட்டுக்கு எதிரி. சுதந்திர போராட்ட தியாகி வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொடுமைபடுத்தியவர். அவரது நினைவு மண்டபத்தை அரசு சார்பில் புனரமைப்பதா என சிலர் கேள்வி எழுப்பியிருப்பது தான் இந்த சர்சைக்கு காரணம்.




இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக துணைத்தலைவர் வழக்கறிஞர் வாரியாரிடம் கேட்டபோது, பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயிர் மூச்சை தான் நாம் சுதந்திர காற்றாக சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. நம் தேசம் சுதந்திரம் பெறுவதற்கு நமது தலைவர்கள் அறவழியில் போராடி இருந்தாலும் ஆங்கிலேய அரசு சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மிகப்பெரிய அடக்கு முறையை கையாண்டது என்பது வரலாற்று உண்மை, சிறைச்சாலையில் தலைவர்கள் அடைக்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டதோடு வாய் பூட்டு சட்டம் எல்லாம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் விடுதலைக்காக போராடியவர்கள் மீது திணிக்கப்பட்டது. தேச முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போது தென்னிந்தியாவில் குறிப்பாக இந்த தூத்துக்குடி மண்ணில் வ உ சிதம்பரம் ஆங்கிலேயருக்கு எதிராக வெகுண்டு எழுந்தார்.




வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் செயல்பாட்டால் கவர்ந்து இழுக்கப்பட்டு தேச விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்தவர் வாஞ்சிநாதன், அந்த காலகட்டத்தில் இந்த பகுதியின் மாவட்ட ஆட்சியாளராகவும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர் வெள்ளைக்கார ஆஷ்துரை. ஈவு இரக்கமற்று செயல்பட்ட ஒருவர்தான் இந்த ஆஷ் துரை. இந்திய சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு ஆஷ் துறை முயன்றதால் அவரை சுட்டுக் கொன்றதோடு தன்னையும் சுட்டு மாய்த்துக்கொண்டார் வாஞ்சிநாதன். தற்போது இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தூத்துக்குடியில் உள்ள ஆஷ் துரை நினைவு மண்டபத்தை சீரமைக்கும் பணியை தற்போது மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக முதலில் நிறுத்த வேண்டும். ஆஷ்துரை நினைவு மண்டபம் என்ற பெயரை நீக்கி அந்த இடத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் புதிய பெயரை சூட்ட வேண்டும். பின்னர் புதுப்பிக்கப்படும் இடத்தில் மாவீரன் வாஞ்சிநாதன் திருவுருவம் அமைக்கப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வைக்கப்படும் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் அரசியலாக பார்க்காமல் தேசப்பற்று மிக்க கோரிக்கையாக கவனத்தில் கொண்டு அதனை நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.




இதுதொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகனிடம் கேட்டபோது, மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதன கட்டிடங்களை புனரமைக்க தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் 5 கட்டிடங்களை தேர்வு செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று தான் ஆஷ் நினைவு மண்டபம். அந்த மண்டபத்தில் வெள்ளையடித்தல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற சிறிய பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஒப்புதலோடு தான் இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன.




மாநகராட்சி சார்பில் என்ன பணிகள் நடைபெற்றாலும், அதனை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம் தான். அதுபோல தான் ஆஷ் நினைவு மண்டப பணிகளையும் நானும், ஆணையரும் பார்வையிட்டோம். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. சிலர் உள்நோக்கத்தோடு கருத்துக்களை பரப்புகின்றனர். ஆஷ் நினைவு மண்டபம் என்பதற்காக அல்ல. பழமையான கட்டிடம் என்பதால் தான் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு எதிராக சிலர் உள்நோக்கத்தோடு கருத்துக்களை பரப்புகின்றனர் என்றார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண