தமிழகம் - கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக கேரளா எல்லைப்பகுதியான  எஸ் வளைவு பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எஸ் வளைவு தண்டவாள பகுதியில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் லாரி முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், அந்த  நேரத்தில் நெல்லையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. தண்டவாள பகுதியில் லாரியானது விழுந்து கிடந்த நிலையில் அந்த பகுதியில் ரயில் வந்ததால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் சூழல் உருவானது. அதனை பார்த்த புளியரை பகுதியை சேர்ந்த சண்முகையா என்ற நபர் எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடி சென்று சற்று தொலைவில் வைத்து லைட் அடித்து சிக்னல் காண்பித்தார். அதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார்.  இதனால் மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.



இதனிடையே லாரி விபத்து குறித்து புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தென்காசி ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரி விபத்தில் சிக்கி லாரி டிரைவர் உயிரிழந்ததை அறிந்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக லாரி கிளீனர் விபத்தின் போது கீழே குதித்து உயிர் தப்பியது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி ஓட்டுநர் முக்கூடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 34) என்பதும், தூத்துக்குடிக்கு இருந்து பிளைவுட் ஏற்றி வந்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.


மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தண்டவாளப் பகுதியில் லாரியானது விபத்துக்குள்ளாகுள்ள நிலையில் அதனை சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தில் கிடந்த லாரி அகற்றப்பட்டது.. இதன் காரணமாக, செங்கோட்டையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயிலும், சென்னையிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற ரயிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்னர்  புறப்பட்டு சென்றது.. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் குறைந்த வேகத்தில் போக்குவரத்து இயக்கப்பட்டு  சீர் செய்யப்பட்டன. தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி விபத்தால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்து அங்கிருந்த அனைவரையும் நிம்மதி பெருமூச்சில் ஆழ்த்தியது..